விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக அரசு விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது,
நான்கு முதல்வர்கள்:
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. கொங்கு மண்டலத்தில் முதியோரிடம் கொள்ளை அடிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட அவல ஆட்சி தேவையா?
தமிழகத்தில் நான்கு முதல்வர்கள். அதாவது ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்குபேர் ஆட்டிப்படைத்து வருகின்றனர். ஒரு டிஜிபியை நியமிக்க முடியாத அரசு இது.
எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார்கள்? நிரந்தர டிஜிபி இருந்தால்தான் காவலர்களை சரியான முறையில் நடத்துவார்கள். பலமுறை சொல்லியும் இதுவரை டிஜிபி நியமிக்கவில்லை. பணி ஓய்வுபெறுவதற்கு 3 மாதம் முன்பே மத்திய யுபிஎஸ்சிக்கு பட்டியல் அனுப்ப வேண்டும். அதிலிருந்து மூவர் பேர் அனுப்புவார்கள். அதிலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். இவர்களுக்குத் தேவையானவர் நபர் இடம்பெறவில்லை, என்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
பாலியல் வன்கொடுமை:
போதைப்பொருள் நிறைய கிடைக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. தினமும் கொலை நிலவரம் பார்க்கும் நிலை வந்துவிட்டது. 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு 104 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்தோம் என்று சமூகநலத்துறை அமைச்சர் பேசுகிறார். இது கேவலமாக இல்லையா? பாலியல் வன்கொடுமையை தடுத்திருந்தால் நல்ல ஆட்சி. நிவாரணம் கொடுப்பதால் வாழ்க்கை திரும்பி வந்துவிடுமா? இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது.
சூழ்ச்சிகளை முறியடித்த அதிமுக:
ஸ்டாலின் எத்தனை முறை வீழ்த்த முயற்சித்த சூழ்ச்சிகளை முறியடித்த கட்சி அதிமுக. முதலில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது திமுக வினர் எப்படி நடந்துகொண்டனர். சபாநாயகர் டேபிளில் ஏறி டான்ஸ் ஆடினர். நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் நாங்கள் வென்றோம். அப்போதே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர், ஆட்சியை வீழ்த்த முடியவில்லை, அற்புதமான ஆட்சி கொடுத்தோம். பல திட்டங்களை கொடுத்தோம்.
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த நான்காண்டுகளில் திமுக அரசால் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை. அதற்கெல்லாம் திறமை வேண்டும்.
விலைவாசி உயர்வு:
இங்கு ஒரு திறமையற்ற முதல்வர் நம்மை ஆள்கிறார். மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67 சதவீதம் உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு. தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். ஆண்டுக்கு 6% உயர்வு. விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. மளிகை கடையில் புள்ளிவிவரங்களை பெற்று பேசுகிறேன், இல்லையெனில் எடப்பாடி பழனிசாமி பஸ்ஸைத் தூக்கிக்கொண்டு வந்து பொய் சொல்வதாகச் சொல்வார்கள்.
பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் திமுக ஆட்சியில் 77 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் திமுக ஆட்சியில் 72 ரூபாய், இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய், கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 400 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை.
நடவடிக்கை இல்லை:
அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், விலைவாசி உயரும் சமயங்களில் அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒரு யூனிட் எம்.சாண்ட் அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 5500 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு யூனிட் ஜல்லி அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 4500 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு டன் கம்பி அதிமுக ஆட்சியில் 40 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 70 ஆயிரம் ரூபாய், ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் 6 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 10 முதல் 12 ரூபாய்க்கு விற்கிறது, சிமெண்ட் அதிமுக ஆட்சியில் வெளிமார்க்கெட்டில் 240 ரூபாய், திமுக ஆட்சியில் வெளி மார்க்கெட்டில் ஒரு மூட்டை 350 ரூபாய், மரம் 200% உயர்ந்துவிட்டது.
வீடுகட்ட முடியாத நிலை:
இனி ஏழை மக்கள் வீடுகட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஏழைகளும் நடுத்தர மக்களும் இரவில் கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். டாஸ்மாக் 10 ரூபாய் என்றால் யாரு? செந்தில் பாலாஜி. நம்மாளுங்க கடைக்கு போகாதீங்க, திமுககாரங்கதான் போறாங்க. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இதெல்லாம் விசாரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






















