சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவத்தால் அடித்தே கொல்லப்பட்ட காதலனின் உடலுடன் இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் மனமுடைய செய்துள்ளது.

சாதிய ஆணவத்தால் கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என, இளைஞனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்:
மகாராஷ்டிரா மாநிலம் நண்டெட் மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் சரமாரியாக தக்கப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் சாதிய ஆணவத்தால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளைஞரின் இறுதிசடங்கின்போது தனது நெற்றியில் குங்குமம் பூசிக்கொண்ட அவரது காதலி, நான் எனது காதலை திருமணம் செய்து கொண்டேன், மரணத்தால் எங்கள் காதல் அழியாது, இனி இறுதி வரை அவரது வீட்டிலேயே வாழ்வேன் என சபதம் எடுத்த சம்பவம் அங்கிருந்த மக்களை கண்கலங்க செய்துள்ளது.
காதலும்.. சர்ச்சையும்..
ஆஞ்சல் எனும் 19 வயது இளம்பெண் தனது சகோதரர்கள் வாயிலாக சாக்ஷம் டாடே என்பவரை முதன்முறையாக சந்தித்துள்ளார். இதையடுத்து இருவர் இடையேயான நட்பு மெல்ல மெல்ல வளர்ந்து காதலாக உருவெடுத்துள்ளது. கடந்த 3 வருடங்களாக நீடித்து வந்த இவர்களது காதல் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இரண்டு குடும்பத்தினரும் நண்பர்களாக இருந்தபோதும், வேறு சாதியினை சேர்ந்த சாக்ஷமை காதலிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும், அதையும் தாண்டி ஆஞ்சல் மற்றும் சாக்ஷம் தங்களது காதலில் உறுதியாக இருந்துள்ளனர்.
குடும்பத்தினரின் திட்டம்:
சாக்ஷமை திருமணம் செய்து கொள்வதில் தான் உறுதியாக இருப்பதாக ஆஞ்சல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணில் சகோதரர்கள் மற்றும் தந்தை சேர்ந்து, கடந்த 27ம் தேதியன்று சாக்ஷமை துப்பாக்கியால் சுட்டு சரமாரியாக தாக்கி கல்லை போட்டு தலையை நசுக்கு கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆஞ்சலின் பெற்றோர், சகோதரர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவன் ஒருவனும் பிடிக்கப்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப்பட்டுள்ளான்.
காதலனின் உடலுடன் திருமணம்:
இதனிடையே இட்வாரா பகுதியில் உள்ள சாக்ஷமின் வீட்டில் அவரது உடலுக்கான இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது கதறி அழுதபடி அங்கு வந்த ஆஞ்சல், காதலனின் உடலைப்பற்றி மனமுடைந்து அழுதுள்ளார். தொடர்ந்து, அதே இடத்தில் தனது நெற்றியில் குங்குமத்தை பூசி, மனரீதியாக எனது காதலனை திருமணம் செய்து கொண்டேன், இனி நான் சாகும் வரை அவரது வீட்டிலேயே அவரை நினைத்துக்கொண்டே நான் வசிப்பேன் என அழுதபடி தெரிவித்தார். அதோடு, ”நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தோம். ஆனால், அவர் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் என் குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர்கள் சாக்ஷமை கொன்றனர். அவரைக் கொன்றவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்” என ஆஞ்சல் கோரிக்கை விடுத்துள்ளார்.






















