லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
கோபியில் பேசிய எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை சுயநலவாதி, துரோகி என விமர்சித்து பேசியுள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது,
ராஜினாமாவிற்கு முன்பு கேட்டாரா?
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெல்லும், அதிலும் கோபி தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.
இந்த தொகுதியில் ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஓட்டு வாங்குவதற்கு உங்களிடம் வந்தார். ராஜினாமா செய்வதற்கு உங்களிடம் கேட்டாரா? இனி, அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
அதிமுக ஆட்சியில் கோபி தொகுதி எடப்பாடி தொகுதிக்கு மேலாக வளர்ச்சியடைந்து, தமிழகத்தில் முதல் தொகுதியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கோபியில் இருக்கும் ஒருவர் பற்றி சொல்லியாக வேண்டும். புள்ளிவிவரம் தெரிந்துகொள்ள வேண்டும். எல்.இ.டி திரையில் சிலவற்றை வெளியிடுகிறேன்.
இவரா நல்லது செய்வார்?
அத்திக்கடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியில் நிறைய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், இந்த தொகுதி எம்.எல்.ஏ பங்கு பெறவில்லை. ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேட்டதற்கு, பேனரில் தலைவர் படம், அம்மா படம் இல்லை என்றார். இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக்கட்சியில் சேர்ந்தீர்கள்? உங்களுக்கு அடையாளம், பதவி கொடுத்தது அதிமுக. இதே கோபியில் பள்ளி நிகழ்ச்சியில் அம்மா படம், தலைவர் படம் இல்லை, விலையில்லா சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சியின் காட்சியைப் பாருங்கள்.
பல்வேறு கட்சி தலைவர்கள் சேர்ந்து அதிமுக ஆட்சியில் தான் 50 ஆண்டு விவசாயிகள் வேண்டுகோளை நிறைவேற்றினீர்கள் என்று பாராட்டு விழா நடத்தினார்கள். அங்கு எப்படி நம் தலைவர்கள் படத்தை மட்டும் வைக்கமுடியும். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த கூட்டத்தைப் புறக்கணித்தவர் தான் முன்னாள் எம்.எல்.ஏ. இவரா உங்களுக்கு நன்மை செய்வார்? எதிர்க்கட்சிக்காரர் நம்மை மதிக்கின்றார், நம் கட்சியை சேர்ந்தவர் நம் பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட கலந்துகொள்ளவில்லை என்றால், அவர் மக்கள் மீது அக்கறை கொண்டவரா?
திருந்தவில்லை:
அண்மையில் ஒருமாதம் முன்பு, மனம் திறந்து பேட்டி என்றார், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சிலரை சந்தித்தார், அத்திக்கடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். நாங்கள் அமைதியாக கண்டுகொள்ளாமல் தான் இருந்தோம். ஆனால், மனம் திறந்து பேசுகிறேன் என்று கோபியில் பேட்டி கொடுத்தார், 10 நாளில் இணைப்பை முன்னெடுக்கவில்லை என்றால் நானே முன்னெடுப்பேன் என்று கெடு விதிக்கிறார்.
இப்படிப்பட்டவரை எப்படி வைத்துக்கொள்ள முடியும்? அதனால் கழகமுன்னோடிகளோடு கலந்து பேசி, அவருடைய கட்சி பொறுப்பை எடுத்தோம். அதன் பிறகு திருந்துவார் என்று பார்த்தோம் அப்போதும் திருந்தவில்லை. பிறகு மரியாதைக்குரிய தேவர் நினைவிடம் சென்றார். அதிமுகவில் நீக்கப்பட்டவரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக நீக்கப்பட்டவர்களோடு செல்கிறார்.
லாயக்கற்ற துரோகி:
எனவே, மீண்டும் நிர்வாகிகளை அழைத்துப் பேசினோம். அவர் இனி இங்கு தொடர லாயக்கற்றவர் என்பதாலே அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினோம். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் திட்டமிட்டு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இயக்கத்தில் இருந்துகொண்டே, இயக்கத்துக்கு துரோகம் விளைவித்தார்.
வைத்திலிங்கம், ஓபிஎஸ் கோபியில் கூட்டம் போட்டனர். இப்படி அவர்களே அந்த நபரை அவமரியாதையாகப் பேசுகிறார்கள். ஆனால் இவர் ஒவ்வொரு முறையும் இவர்களையெல்லாம் அழைத்து சட்டமன்றக் கேன்டீனில் வைத்து, இந்த ஆட்சியை ஏதாவது தொந்தரவு கொடுக்க திட்டமிட்டார். அவர்களை விஷமத்தனமாக வெளியேற்றிவிட்டு இவர் இருந்தார்.
சுயநலவாதி:
இப்போது என்னவாச்சு? நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது. இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்களை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்.
நான் இன்றைக்கும் தொண்டன், ஆயிரக்கணக்கான பேரில் நானும் ஒருவன். இவரைப்போல சுயநலவாதி அல்ல, எந்த இயக்கத்துக்கும் இல்லாத சோதனை.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து சோதனைகள்தான். அவற்றை எல்லாம் வென்று முதல்வரானார், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு சோதனை, அதை வென்று அவர் முதல்வரானார். அதுபோல இப்போது வரும் சோதனையை வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். 2026 தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைத்து முதன்முதலாக கோபியில் வெற்றி விழா கொண்டாடுவோம். இது நடக்கும்.
இப்போது மாற்றுக்கட்சிக்கு போயிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க. சும்மா இருந்தால் சரி, தூய்மையான ஆட்சி கொடுப்பேன் என்கிறார். எம்ஜிஆர் இருக்கும்போது எம்.எல்.ஏ, அம்மா மற்றும் எனது அமைச்சரவையில் அமைச்சர், அப்போதெல்லாம் தூய்மையான ஆட்சி கொடுக்கவில்லையா? துண்டை மாற்றியதும் கருத்தும் மாறிவிட்டது.
எந்தக் கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இந்த இபிஎஸ் ஒருவரல்ல… ரெண்டு கோடி தொண்டர் இருக்கிறார். இபிஎஸ் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளராக வருவார், ஒருவரை நம்பியிருக்கும் கட்சியல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















