அழகியே... பிறந்த நாள் வாழ்த்துக்கள்: செல்லப்பிராணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்
தஞ்சாவூரில் தாங்கள் வளர்க்கும் வீட்டு செல்லப்பிராணி நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் மாணவி ஆர்த்தி என்பவரின் குடும்பத்தினர். ஐந்து அறிவுதாங்க நாய்க்கு என்பார்கள்.

தஞ்சாவூர்: நீயும் எங்கள் குடும்பத்தில் ஒருவன்தான் என்று தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடி தங்கச் செயின் அணிவித்து மகிழ்ந்துள்ளனர் மாணவி ஆர்த்தி குடும்பத்தினர்.
தஞ்சாவூரில் தாங்கள் வளர்க்கும் வீட்டு செல்லப்பிராணி நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் மாணவி ஆர்த்தி என்பவரின் குடும்பத்தினர். ஐந்து அறிவுதாங்க நாய்க்கு என்பார்கள். ஆனால் ஆறறிவு உள்ள மனிதர்களிடம் நன்றி விசுவாசம் வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கும் உயிர்தான் நாய்கள். விசுவாசத்தின் மறு பெயர் என்றால் அது நாய்கள்தான்.

தங்களை வளர்க்கும் எஜமானருக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக தங்களின் உயிரை கொடுத்து காப்பாற்றும் குணம் கொண்டவை. பல வீடுகளில் குழந்தைகளுக்கு பாதுகாவலனாக, நண்பனாக, வேலைக்காரனாக நாய்கள் உள்ளன. வீட்டைக் காக்கும் நன்றி உள்ள பிராணி என்பதால் பொதுமக்களில் சிலர் தங்களது வீடுகளில் செல்லப் பிராணியான நாயிடம் அன்பாக பழகி, அதற்கு முறையாக உணவு வழங்கி, அதை வளர்த்தும் பராமரித்தும் வருகின்றனர்.
மேலும் தங்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்போல் நாய்களை வளர்ப்பவர்களும் உள்ளனர். அப்படி நாயை தங்களின் குடும்ப உறுப்பினராக தங்களில் ஒருவராக தஞ்சையை சேர்ந்த மாணவி ஆர்த்தி குடும்பத்தினர் வளர்த்துள்ளனர். தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணி நாய்க்கு மனிதர்களுக்கு கொண்டாடப்படும் பிறந்த நாள் விழா போன்று தங்களது செல்லப் பிராணியான வளர்ப்பு நாய்க்கு அழகி என பெயர் சூட்டி பிறந்த நாளில் கேக்கில் பெயர் எழுதி, முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மாணவி ஆர்த்தியின் குடும்பத்தினர் கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடினர்.
அழகிக்கு புது உடை, தலையில் பிறந்தநாள் குல்லா அணிவித்து, அதை கொஞ்சி, கழுத்தில் தங்க சங்கிலி அணிவித்து பின்னர் கேக் வெட்டி நாய்க்கு ஊட்டி பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சியுடன், உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். செல்லப் பிராணியான நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடி விலங்கின ஆர்வலர்களிடையே பாராட்டை பெற்றுள்ளனர் ஆர்த்தியின் குடும்பத்தினர் என்றால் மிகையில்லை. அப்புறம் என்ன பிறந்த நாளை தன்னை வளர்ப்பவர்கள் கோலாகலமாக கொண்டாடியதால் அழகியும் ஹேப்பி அண்ணாச்சி.




















