நூற்றுக்கணக்கில் திரண்ட பக்தர்கள்... எங்கு? எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூர் நகரின் நான்கு வீதிகளில் வடமேற்கு பகுதியான திகழும் வாயு மூலையில் இந்த கோயில் இருப்பதால் மூலை அனுமார் என்று அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோயிலில் இன்று 19ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி வழிபாடு நடந்தது.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மன் கட்டினார். இதனால் இக்கோயிலில் பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் என்றும் தஞ்சாவூர் நகரின் நான்கு வீதிகளில் வடமேற்கு பகுதியான திகழும் வாயு மூலையில் இந்த கோயில் இருப்பதால் மூலை அனுமார் என்று அழைக்கப்படுகிறது. பிரதி அமாவாசை தோறும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்தில் 18 அகல் தீபமேற்றி 18 வலம் வந்து வழிபடுவதால் மூலை அனுமாரை பக்தர்கள் அமாவாசை அனுமார் என்றும் அழைப்பர்.

இத்தலத்தில் அமாவாசை அன்று மூலை அனுமாரின் ஆகர்ஷண சக்தி சூட்சும ரூபத்தில் தங்களுக்கு கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக அமாவாசை அன்று பக்தர்கள் அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வந்து மூலை அனுமாருக்கு 18 எலுமிச்சை பழங்களான மாலை சாத்தி வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சத்ரு உபாதைகள் நீங்கவும் தொழில் அபிவிருத்தி ஏற்படவும் வாஸ்து தோஷம் நீங்கவும் எமபயம் விலகி ஆயுள் விருத்தி ஏற்படவும் மூலை அனுமாருக்கு பக்தர்கள் தங்களது கையால் அவரவர் வயதுக்கு ஏற்ப எலுமிச்சை பழங்களை கோர்த்து மாலையாக சாத்தி வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.
கேட்டதை அள்ளி தருவார் அனுமார்
இத்தலத்தில் பக்தர்கள் 18 வலம் வரும் போது ராம என்கிற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் பக்தர்கள் கேட்பதை எல்லாம் மூலை அனுமார் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மார்கழி மாதத்தில் மூலை அனுமார் கோயிலில் பக்தர்கள் 108 வலம் வந்து வழிபட்டால்( நாள் ஒன்றுக்கு 18 வலம் வீதம் ஆறு நாட்கள்)நினைத்த காரியங்கள் யாவும் அடுத்த வருடத்திற்குள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அனுமன் ஜெயந்தி வழிபாடு
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று 19ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு லட்ச ராம நாமம் ஜெபம், 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்தலத்தில் அனுமன் ஜெயந்தி முதல் தொடர்ந்து 18 அமாவாசைகள் 18 வலம் வந்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட நவக்கிரக தோஷமும் வாஸ்து தோஷமும் நீங்கும். சனி,செவ்வாய் ,இராகு,கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்து எடுத்து வரப்படும் தேங்காயை இத்தலத்தில் சிதறு தேங்காய் ஆக எறிந்து சென்றால் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தற்போது இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அனுமன் ஜெயந்தி வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோயில் செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் கண்காணிப்பாளர் ரவி மற்றும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திர வழிபாட்டு கைங்கர்யம் தொண்டர்கள் செய்திருந்தனர்.





















