தஞ்சை மாவட்டத்தில் 600க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் 600க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றியை எளிதில் மகிழ்ந்து அருள்பவர் விநாயகர். அவருக்குரிய பூஜைகளில் தலையாயது விநாயகர் சதுர்த்தி. ஓர் ஆண்டில் வரும் வளர்பிறைச்சதுர்த்தியில் தலையாயது ஆவணி மாதம் வரும் சதுர்த்தி. பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி வளர்பிறையில் வழிபட்டால் ஆண்டுமுழுவதும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும். எனவேதான் அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்றே அழைத்துக் கொண்டாடுகிறோம்.
காரணம் ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம். தெய்வங்களில் முழுமுதற்கடவுள் விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி.
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பது ஆன்றோர் வாக்கு. சந்தனமோ சாணமோ மஞ்சளோ தூய மனதுடன் எடுத்துப் பிடித்து வைத்து மஞ்சள் குங்குமம் சாத்தி வணங்கினால் அதில் பிள்ளையார் ஆவாகனமாகி அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை. எந்த பூஜை தொடங்கும் முன்னரும் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபட்டு அதன் பிறகே பிரதான பூஜையைத் தொடர வேண்டும் என்பது ஐதிகம். எனவே விநாயக சதுர்த்தி பூஜையிலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட வேண்டியது மிகவும் அவசியம். மஞ்சள் விநாயகரை வழிபட்டபின் பிரதான பூஜையாக களிமண்ணால் ஆன விநாயகரை வழிபட வேண்டும். வீட்டில் விநாயகர் விக்ரகம் வைத்திருப்பவர்கள் கூட இந்த நாளில் புதிதாக களிமண் விநாயகர் வாங்கி வழிபடுவது விசேஷம்.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு நடத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டன. தஞ்சை மாநகரில் மட்டும் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே பா.ஜ.க. சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. விழாவுக்கு மாவட்ட பொருளாளர் விநாயகம் தலைமை வகித்தார்.. தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜேஸ்வரன், அ.தி.மு.க. கவுன்சிலர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைக்கு தீபாரததனை காண்பித்து பூஜை நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு பொங்கல், கொழுக்கட்டை வழங்கப்பட்டது. மாநில தொழிலாளர் பிரிவு செயலாளர் ரங்கராஜன், மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் சிவப்பிரகாசம், டாக்டர்கள் பாரதி மோகன் , அருண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சை மாநகரில் 51 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் பூஜிக்கப்பட்டு வருகிற 2-ம் தேதி மாலை தஞ்சை ரயிலடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்திஜி ரோடு, தெற்கு வீதி, மேல வீதி வழியாக கரந்தை வடவாற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் விநாயகம் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மல்லிப்பட்டினத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதற்காக 350க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று கும்பகோணத்தில் விசர்ஜனை செய்யப்பட்ட நிலையில், இன்று பட்டுக்கோட்டையிலும், வரும் 3ம் தேதி அதிராம்பட்டினத்திலும், 4ம் தேதி மதுக்கூரிலும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதில் அதிராம்பட்டினம் மற்றும் மதுக்கூர் பகுதிகளில் பதற்றம் நிறைந்தவை என்பதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.