குழந்தை பாரதிக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்டும் பேரணி - தஞ்சை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
''குழந்தை பாரதிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 16 கோடி பணம் இருந்தால் தான் ஊசி போட முடியும்''
தஞ்சாவூரில் கண் தானம், வாகன ஒட்டிகள் ஹெல்மேட் அணிவது, குழந்தை பாரதிக்கு நிதி திரட்டுவது மற்றும் விழிப்புணர்வு வாகன பேரணி ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் தஞ்சாவூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்றது. தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் கலந்து கொண்டு, கண்தானம் வழங்கியவர்கள், லயன்ஸ் சங்கங்களுக்கு பாராட்டு சான்றிகழ்களை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் பேசுகையில், தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களை அகற்றினால்தான் அவற்றை பயன்படுத்த முடியும். இறந்தவர்கள் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தால், அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதேபோல, முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில், ஒரு சிலரது கண்களில் செல்கள் குறைவாக இருக்கும். அந்த கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்றார். இதனை தொடர்ந்து பெண் குழந்தை பாரதிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினா். பின்னர், 15 ஆட்டோக்கள், 50 க்கும் மேற்பட்ட பைக்குகளில் கண் தானம், ஹெல்மேட் விழிப்புணர்வு செய்த படியும், குழந்தை பாரதிக்கு நிதியை திரட்டுவதற்காக பேரணியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து நிதி திரட்டும் நிர்வாகி கூறுகையில், குழந்தை பாரதிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 16 கோடி பணம் இருந்தால் தான் ஊசி போட முடியும். அதற்காக தஞ்சாவூர் முழுவதும் ஆட்டோ, பைக் மூலம் நிதி திரட்டுகின்றோம். பெண் குழந்தை பாரதிக்கு நவம்பர் 6ஆம் தேதிக்குள் ஊசி போட வேண்டும் என்பதால், மாவட்ட நிர்வாகம், பொது மக்கள், தன்னார்வலர்கள் சார்பில் திரட்டும் நிதியை அதற்கு முன்னதாகவே வழங்கப்படுகிறது. இதே போல் தன்னார்வ பெண்கள் அமைப்பினர் சுமார் 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் பகுதியில் நிதி திரட்டுவதை தொடங்குகிறார்கள். எனவே, போர் கால அடிப்படையில் நிதியை திரட்டி, எப்படியாவது பாரதியை காப்பாற்றிட வேண்டும் என்றார்.