கும்பகோணத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட லாட்ஜ் உரிமையாளர், பெண் உள்பட 5 பேர் கைது
’’இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்த போது ஒரு பெண்ணை அழைத்து கொண்டு நான்கு பேர் லாட்ஜிற்குள் நுழைவது தெரிய வந்தது’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயதிற்கு விஷேச நாட்கள் மட்டுமின்றி, நாள் தோறும் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இக்கோயிலிலுள்ள கல்பலகணி மற்றும் கடல் நுரையினாலான விநாயகர், சப்தபஜ காளியம்மன், சிவபெருமான் இருப்பதால், இதனை பார்ப்பதற்கும், குறிப்பெடுத்தக்கொள்வதற்கும், சுவாமிகளை தரிசனம் செய்வதற்கும் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள். இதனால் இக்கோயிலில் காலை முதல் இரவு வரை கூட்டமாக இருக்கும்.
இந்நிலையில், திருவலஞ்சுழியிலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள லாட்ஜில், விபச்சாரம் நடப்பதாக, சுவாமிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது, ஒரு பெண்ணை அழைத்து கொண்டு நான்கு பேர் லாட்ஜிற்குள் நுழைவது தெரிய வந்தது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின், போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, விபச்சாரத்திற்கு உடந்தையாக இருந்த, லாட்ஜின் உரிமையாளரும், அதே பகுதியை சேர்ந்தவருமான கண்ணன் மகன் ரகுநாதன் (37), திருப்புறம்பியம், குளக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் சேகர் (55),இதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி லதா (35), திருப்பனந்தாள், மணிக்குடியை சேர்ந்த விவேக் மகன் சுதாகர் (28), கும்பகோணம், சத்தியம் நகரை சேர்ந்த ஆனந்த் மகன் ஜெகன்(26) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோயில்கள் மற்றும் குடியிருப்புகள் பகுதிகளில் உள்ள லாட்ஜில் இது போன்ற விபச்சாரம் தொழில் நடைபெற்றதை அறிந்த பொது மக்கள் பெரும் வேதனைக்குள்ளானார்கள்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக லாட்ஜில் போதுமான வருமானம் இல்லாததால், அதன் உரிமையாளர், விபச்சாரம் தொழிலில் ஈடுபட தொடங்கினார். இதனால், வெளியூர், வெளி மாவட்ட பெண்கள் அதிகமாக வரத்தொடங்கினர். மேலும் லாட்ஜிற்கு வரும் ஆண்கள், குடித்து விட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள பெண்கள், வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இது போன்ற சம்பவம் பெரும்பாலான லாட்ஜிகளில் நடைபெறுவதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நகரமான திருவலஞ்சுழியில் தினந்தோறும் வரும் பக்தர்கள், தெய்வ பக்தியுடன், லாட்ஜில் ஒய்வெடுத்து செல்லும் நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால்,பக்தர்களின் வருகை குறைவதற்கு வாய்ப்புள்ளது. திருவலஞ்சுழியிலுள்ள வர்தத்க நிறுவனங்கள் அனைத்தும் கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி தான் உள்ளோம். எனவே, மாவட்ட காவல் துறை, கோயில் பகுதிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.