தஞ்சாவூர் : அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தந்தை.. காப்பாற்ற சென்ற மகனும் உயிரிழந்த சோகம்..
’’வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தூக்க கலக்கத்தில் துரைக்கண்ணன் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு’’
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள அகரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துரை கண்ணன் (50). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், அருண்குமார், பிரேம்குமார் என்ற மகன்களும் ஹேமா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பிரேம்குமார் பொறியியல் படித்துவிட்டு திருச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் தொழில் அப்ரண்டீசாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அகரப்பேட்டையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதற்கிடையில் அதிகாலை வீட்டு வாசலில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த துரைக்கண்ணன் கதவை திறந்து கொண்டு வெளியே பார்க்க சென்றார்.
அப்போது வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தூக்க கலக்கத்தில் துரைக்கண்ணன் மிதித்து விட்டார். அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் துரைக்கண்ணு அலறினார். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரேம்குமார் வெளியே வந்த போது, மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த பிரேம்குமார், தனது தந்தையை காப்பாற்றுவதற்காக இழுத்தார். வீட்டின் வெளியில் தரை ஈரமாகவும், அறுந்த கிடந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தால், துரை கண்ணனும், பிரேம்குமாரும் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சோகம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாமந்தான் குளம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை தொழிலாளி என். ரமேஷ் (31). வெட்டிக்காடு பிரிவு சாலை அருகே கல்லணை கால்வாயிலிருந்து பிரியும் கிளை வாய்க்காலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றார். அப்போது, இவர் அப்பகுதியிலுள்ள சுழலில் சிக்கினார், நீச்சல் தெரியாததால், காப்பாற்ற கோரி கூச்சலிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள், ரமேஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் காந்திஜி சாலை ஆற்றுப்பாலத்திலிருந்து கல்லணைக் கால்வாயில் மகர்நோன்புசாவடி வைக்கோல்காரத் தெருவைச் சேர்ந்த ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் (15) அக்டோபர் 1 ஆம் தேதி குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது, இவரைக் காப்பாற்ற முயன்ற அப்பகுதியிலுள்ள பிளக்ஸ் வடிவமைப்பு நிறுவன மேலாளரான பூதலூரைச் சேர்ந்த முகிலன் (30) தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஆயிஷா பேகத்தின் சடலம் நத்தமாடிப்பட்டியில், கரை ஒதுங்கியது. இதைத்தொடர்ந்து முகிலனின் உடல் தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் கல்லணைக் கால்வாயில் கீழ்க்குமிழியில் மீட்கப்பட்டது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். இதேபோல, மானோஜிப்பட்டியில் கல்லணை கால்வாயில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஷ்வரன் (22) நீரில் மூழ்கினார். இவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் மீட்கப்பட்டார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தினர்.