கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்: எங்கு? எதற்கு தெரியுங்களா?
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் இறந்ததற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மட்டும் வழங்கியதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர்: கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்திலிருந்து கருப்பு பேட்ச் அணிந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியபோது தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமையில் 50க்கும் அதிகமான விவசாயிகள், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசு, கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் இறந்ததற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மட்டும் வழங்கியதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கியது போதாது. ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை எவ்வித நிபந்தனையும் இன்றி மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணானதால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். அறுவடை செய்த நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் முறையாக கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் சுகுமாரன் தலைமையில் மழையில் நனைந்து முளைத்த நெல்லை இருமுடி போல் கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் கலெக்டர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.





















