நிவாரணத் தொகையை சீக்கிரம் கொடுங்க... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 அறிவித்ததை விரைவாக அரசாணை வெளியிட்டு விவசாயிகளுக்கு கரும்பு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: பருவம் தவறி பெய்த மழையால் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உடன் வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை அதனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் விவசாயிகளுக்கு தடை இல்லாமல் அனைத்து வேளாண் டெப்போகளிலும் விதை. உரம். பூச்சி மருந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தூர்வாரும் பணியை விரைந்து முடித்து தடையில்லாமல் தண்ணீர் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகை கடன் பெறுவதில் புதிய விதியை தளர்த்தி பழைய முறையடியே நடைமுறைபடுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 அறிவித்ததை விரைவாக அரசாணை வெளியிட்டு விவசாயிகளுக்கு கரும்பு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரமூர் அறிவழகன் : கடந்த 21ம் தேதி பெரம்பூர் ஒக்கக்குடி கிராமத்தில் கல்லக்குடியில் உள்ள எனது பம்ப்செட் மற்றும் அருகில் உள்ள சுமார் பத்து பம்ப் செட்டுகளில் ஆழ்குழாய் மோட்டாரில் இருந்து மோட்டார் செட்டுக்கு வரும் மின் கேபிளையும் மர்மநபர்கள் அறுத்துள்ளனர். மேலும் பம்ப்செட் பூட்டை உடைத்து கேபிள் அனைத்தையும் கொளுத்தி காப்பரை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலையில் உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் நிவாரணத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.கே.ஆர்.ரவிச்சந்திரன்: மேட்டூர் அணை திறக்கப்படும் அன்றே குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு ரசாயன உரங்கள் இலவசமாக வழங்கப்படவில்லை. எனவே டிஏபி, யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றை கடந்த ஆண்டுகளில் வழங்கியது போலவே இலவசமாக குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்க வேண்டும். அம்மையகரம், அடஞ்சூர், வரகூர், வைரப்பெருமாள்பட்டி உட்பட கிராமங்களில் ஒற்றைக்கம்ப மின்மாற்றியை உடைத்து செப்புகம்பியை திருடியுள்ளனர். இதேபோல் டிராக்டரிலிருந்து பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெரம்பூர் பிவிஆர் பூங்காவை பராமரித்து சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். இந்தப் பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆள் பற்றாக்குறையை போக்கும் விதமாக உரம், பூச்சி மருந்து தெளிக்கும் ட்ரோன்களை இயக்க விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்க வேண்டும். கதிர் அடிக்கும் இயந்திரங்களை குறைந்த வாடைக்கு வழங்குவது போல் மருந்து தெளிக்க ட்ரோனும் குறைந்த வாடகைக்கு வழங்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு மாதவன்: ஆம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை கிராமத்தில் 150க்கும் அதிகமான ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடு கிடையாது. போராட்டங்கள் பல நடத்தியும் இதுநாள் வரை சுடுகாடு அமைத்து தரப்படவில்லை. இந்த பகுதிக்கு அருகில் உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு ஊராட்சி மற்றும் முள்ளூர்பட்டிக்காடு ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கில் ஒரு இடம் தேர்வு செய்து சுடுகாடு அமைத்து தர வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூர் ரமேஷ்: கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த கன மழையால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. நிவாரணத்திற்காக ஆவணங்கள் வாங்கப்பட்டும் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க வேண்டும். மேலும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தொடர் மணல் திருட்டு நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். முன்பிருந்தவாறு அவரவர் கட்டுமானங்களுக்கு தேவையான மணலை அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். பிள்ளைவாய்க்கால் வலது கரை வெள்ளாம்பெரம்பூர் செல்லும் பாதை கடந்த 2013 இல் அமைக்கப்பட்டது. இதை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக அமைத்துத் தர வேண்டும்.
முத்துவீரக்ண்டியம்பட்டி கிறிஸ்தோப்: பூதலூர் ஊராட்சி ஒன்றியம் முத்து வீரக்கண்டியன்பட்டி ஊராட்சிக்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த 2006ம் ஆண்டு வருகை புரிந்து பல்வேறு நல திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார். இதன் நினைவாக முத்துவீரக்கண்டியன்பட்டியில் அவரது சிலையை நிறுவ வேண்டும். இப்பகுதியில் அமைந்துள்ள சாயக்குடி ஏரிக்கு வெண்டயம்பட்டி கிராமத்தில் அயனாபுரம் வாரியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஏதுவாக வழங்கு வாய்க்கால் அமைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.





















