தஞ்சையில் மின்மோட்டரை தலையில் வைத்து விவசாயிகள் போராட்டம்- மின் இணைப்புகளை வழங்க கோரிக்கை
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் விவசாய மின் இணைப்பு கேட்டு சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில் இதுநாள் வரை மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் காத்திருக்கின்றனர்.
விவசாயத்துக்கு புதிய மின் இணைப்பு பெற பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் சுமார் 4.20 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்புகள் வழங்க வலியுறுத்தி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கும்பகோணத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி குலசேகர நல்லூர் விசுவநாதன் தலைமை வகித்தார். விவசாயிகள் வரதராஜன், தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் விவசாய மின் இணைப்பு கேட்டு சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில் இதுநாள் வரை மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் காத்திருக்கின்றனர்.
தமிழகம் கடந்த ஆறு ஆண்டுகளாக மின் மிகை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை கடந்த அதிமுக அரசு வழங்கவில்லை. கடந்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதியன்று மின்சார வாரியம் மின் பகிர்மான கழக மேலான் இயக்குனரகம் 24 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் திட்டத்தின் கீழ் உடனடியாக வழங்கிட 2020-2021 ஆண்டிற்குள் இலக்கு நிர்ணயித்து ஒராண்டு ஆகியும் இலக்கினை இன்று வரை உழவர்கள் காத்திருக்கின்றனர். நிதிநிலை அறிக்கையில்,அந்தந்த ஆண்டு எத்தனை புதிய மின் இணைப்புகள் வேளாண்மைக்கு வழங்கப்படுகிற கொள்கை அறிவிப்பினை இதுவரை வெளியிடவில்லை. காய்கறிகள், மலர்கள், பழங்கல் சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு மின்இணைப்புகளையும், கட்டணமில்லாமல் வழங்குவதற்கு அறிவிக்க வேண்டும். புதிய மின் இணைப்புகள் வழங்கும் போது, குத்தகை விவசாயிகள், விதவைகள், மகளிர், முன்னாள் படைவீரர்கள், மாற்றத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுதார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கிட வேண்டும். சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்து, அரசானை வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சுயநிதி திட்டங்கள் மூலம் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என கூறிய நிலையில், இன்று வரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே, உடனடியாக விவசாய மின் இணைப்புகளை வழங்க கோரி கண்டன முழக்கங்களிட்டு தலையில், ஆழ்குழாய் மின் மோட்டாரை தலையில் வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் விவசாயி ஆதி.கலியபெருமாள் நன்றி கூறினார்.