மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் அதிகாலை முதல் மழை - அறுவடைக்கு தயாரான பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை
’’அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் அழுக தொடங்கியுள்ள நிலையில் நெற்பயிர்களுக்கு காப்பீடு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளதால் விவசாயிகள் கவலை’’
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. வருகிற செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், ஆகிய இடங்களில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், மாங்குடி, கமலாபுரம், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், நன்னிலம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் அதிக அளவில் வெப்பம் நிலவி வந்த நிலையில் இரவு நேரங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்து வருகின்ற மழையின் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெல் பயிர்களை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் அழுக தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளனர். ஏற்கனவே தாங்கள் பயிரிட்டுள்ள நெல் பயிருக்கு காப்பீடு கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நிலங்கள் எந்தெந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிவதற்காக நேரடியாக சென்று ஆய்வு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும், அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லை என்றால் தாங்கள் செய்த செலவு தொகை முற்றிலும் கிடைக்காமல் போய்விடும் இதனால் அடுத்தகட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட முடியாத நிலை உருவாகும், ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பயிர்களைக் தற்பொழுது கணக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என்பது அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion