மணிப்பூர் வன்முறை சம்பவங்களை கண்டித்து தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்களையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
தஞ்சாவூர்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நிகழும் வன்முறையால் பொதுமக்களும், அப்பாவி பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில ஆளும் பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை உடன் நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி உள்ளிட்ட 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநகர செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றிய செயலாளர் கே.அபிமன்னன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில ஆளும் பாஜக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்களையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட கிளை நிர்வாகி ஜெகன்ராஜ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு, மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மே 18-ம் தேதி அன்று காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த வீடியோ வெளியான பிறகுதான் அச்சம்பவமும், அதன் பின்புலமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.