மயிலாடுதுறை: கடல் அரிப்பால் காணாமல்போகும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை..!
வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கடல் சீற்றத்தால் அழியும் நிலை உருவாகியுள்ளது.
கி.பி 1620-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் இந்தியாவில் தங்களது வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்தனர். அதற்காக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை தேர்வு செய்த அவர்கள், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளில் அந்த பிரமாண்ட கோட்டையானது கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அது அமைந்தது.
400 ஆண்டுகள் பழமைகொண்டிருப்பினும், இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோட்டையின் செயல்பாடு அகழ்வைப்பத்தில் 14, 15,16- ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள், 1200 ஆம் ஆண்டு கால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருள்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போர்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க புராதான சின்னமாக டேனிஷ் கோட்டை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் விடுமுறை மற்றும் விழா காலங்களில் சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். வெளி மாநிலம், மாவட்டம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கம்பீரமாய் காட்சி அளிக்கும் டேனிஷ் கோட்டையின் மறுபக்கம் கடல் அலைகளில் சீற்றத்தால் பாதிக்கபட்டு வருகிறது.கடந்த ஆண்டு அடுத்தடுத்து ஏற்பட நிவர், புரேவி புயல்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு கோட்டையின் தடுப்புச்சுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் இடிந்து விழுந்தன. இந்த பாதிப்புகள் தற்போது வரை சீரமைக்கபடாததால் சூழலில் தற்போது ஏற்பட்டுவரும் தொடரும் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டையின் பிரதான சுவர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் வரும் மழைகாலத்தில் கடல் சீற்றம் அதிகரித்து வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே கோட்டையை சுற்றி கடற்கரையோர பகுதி முழுவதும் நிரந்தர கருங்கள் தடுப்புச்சுவர் அமைக்க தொல்லியல் துறையினர் தமிழ்நாடு அரசுக்கு இது குறித்து அறிக்கை அனுப்பி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், சமுக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.