Cyclone Mandous: மாண்டஸ் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி துறைமுக தூண்டில் வளைவு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடித் துறைமுகத்தில் மாண்டஸ் புயல் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 -ம் ஆண்டு அதிமுக அரசால் 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக தரங்கம்பாடி கடலில் 1070 மீட்டர் தூரம் 15 அடி உயரம், 15 அடி அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவடைந்து. கடந்த 2020 -ல் அம்பன் புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
அதனை தொடர்ந்து, மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 20 அடி உயரத்தில் 15 அடி அகலமுடன் கூடுதலாக 70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் துறைமுக பணிகள் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் நேற்று கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு கடுமையாக சேதமடைந்தது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது கான்கிரிட்டிலான பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 10 அடியில் இருந்து 15 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் அதில் பாதிப்பு ஏற்பட்டு தூண்டில் வளைவில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கருங்கர்களால் ஆன தடுப்பு சுவரில் மண் கொண்டு நிரப்பப்பட்டு மேலே கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் அலை வேகத்தில் கருங்கல்லில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக சமதளத்தில் இருந்த கான்கிரீட் பாதையானது பல இடங்களில் உள்வாங்கியுள்ளது. மேல்மட்ட விளிம்பு பகுதிகள் சேதமடைந்துள்ளது. தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து தூண்டில் வளைவை ஆய்வு செய்து சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் மாண்டஸ் புயல் காரணமாக பெய்யும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய தன்னார்வலர்கள்.
சாலையோரத்தில் தங்கி உள்ள ஆதரவற்ற மக்கள், சாதாரண நேரங்களில் பொதுமக்கள் தரும் பணம் மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருவார்கள். ஆனால் புயல், கனமழை நேரங்களில் சாலைகளில் மக்கள் போக்குவரத்து இல்லாமல் இருப்பதால் இந்த ஆதரவற்ற மக்கள் உணவின்றி கடும் சிரமங்களை அடைவார்கள். இத்தகைய மக்கள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மயிலாடுதுறையில் இருந்து செயல்படும் ஜோதி பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை பேரிடர் காலங்களில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்தனர். அவர்களை ஜோதி அறக்கட்டளை தலைவர் ஜோதிராஜன் உள்ளிட்டவர்கள் சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்கினர். மயிலாடுதுறை தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இதே போல் சுமார் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.