உழவர்களின் வாழ்வை உயர்த்தும் தீவனப்பயிர் சாகுபடி: வேளாண்துறை அளித்த ஆலோசனை
தீவன பயிர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பசுந்தீவன தேவையில் 42% குறைபாடு காணப்படுகிறது

தஞ்சாவூர்: உழவர்களின் வாழ்வினை உயர்த்தும் தீவனப் பயிர்கள் சாகுபடி குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.
விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த இணையற்ற தொழில்களாகும். மக்களின் இன்றியமையாத அன்றாட தேவைகளுக்கு கால்நடைகளை உதவி வருகிறது. ஆண்டு முழுவதும் சமச்சீரான சத்துக்கள் நிறைந்த பசுந்தீவனத்தை அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியையும், இறைச்சி உற்பத்தியும் உயர்த்த முடியும். எனவே கால்நடை வளர்ப்பவர்கள் கட்டாயம் பசுந்தீவன சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்துறை யோசனை வழங்கி உள்ளது.
தீவன பயிர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பசுந்தீவன தேவையில் 42% குறைபாடு காணப்படுகிறது இதனை பூர்த்தி செய்ய குறைந்த நிலப்பரப்பில் அதிக சத்துக்கள் மற்றும் விளைச்சலை கொடுக்கக்கூடிய தீவன பயிர் ரகங்களை சாகுபடி செய்வது சிறந்த ஒன்றாகும்.
பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்
பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தினை பசுந்தீவனம் கொடுக்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு சுமார் 2000 சர்வதேச அளவீடுகள் கொண்ட ஏ வைட்டமின் கறவை மாடுகளில் இருந்து உறிஞ்சப்படுகிறது. இந்த இழப்பினை பசுந்தீவனம் அளிப்பதன் மூலம் சரிகட்ட இயலும். பால் உற்பத்தி செலவில் தீவனத்தின் பங்கு 60- 65 சதமாகும். எனவே கலப்பு தீவன செலவினை குறைக்க பசுந் தீவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தீவன சோளம்
கோ. 31 ரகம் அதிக பசுந்தீவன விளைச்சலாக ஒரு ஆண்டுக்கு ஏழு அறுவடையில் ஒரு ஏக்கருக்கு 75 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. அகலமான இலைகளுடன் அதிக தூர் வெடிக்கும் திறன் கொண்டது. அதிக புரதச்சத்து (9.86) கொண்டது. நார்ச்சத்து 19.8 சதம். கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் விரும்பி உண்ணக்கூடியது.
சோளம் கோ 32
தானியம் மற்றும் தீவன விளைச்சலுக்கு ஏற்ற புதிய ரகம். 105 - 110 நாட்கள் வயதுடையது. புரதச்சத்து 11.31- 14.66 சதமாகும். நார்ச்சத்து 5.8 சதம். இதனை இறவையில் தைப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். விதை அளவு 4. கிலோ. இறவையில் தானிய விளைச்சல் ஏக்கருக்கு 1150 கிலோவும், தீவன விளைச்சல் ஏக்கருக்கு 4500 கிலோவும் கிடைக்கிறது. கதிர்கள் நன்கு முற்றிய பிறகு அறுவடை செய்யலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் கோ.4, கோ.5
தானிய பயிரான கம்பையும் நேப்பியர் புல்லையும் ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த புல் ஒரு பல்லாண்டு பயிராகும். இதில் தூர்கள் அதிகமாகும். இலைகள் கூடுதலாகவும், சர்க்கரை சத்து மிகுந்தும் இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்ணும். இது எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. விதை அளவு ஏக்கருக்கு 13000 கரணைகள் தேவை. இதனை இறவை பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம். விளைச்சல் ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு 150 டன்.
குதிரை மசால் கோ 2
இதன் தண்டுகள் மிருதுவாகவும், அதிக தண்டுகளுடன் கரும்பச்சை இலைகளை கொண்டது. இதன் விளைச்சல் ஆண்டுக்கு 14 அறுவடைகளில் ஏக்கருக்கு 50 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. இதன் புரதச்சத்து 23.5% ஆகும்.
கொழுக்கட்டை புல்: கோ 1
பல்லாண்டு பயிர். 120- 130 செ.மீ உயரம் வளரக்கூடியது. 60- 65 தூர்கள் இருக்கும். ஒரு செடியில் 550 - 600 இலைகள் இருக்கும். இலைகளின் நீளம் 25 - 30 சென்டிமீட்டர். விதை அளவு 3 கிலோ ஒரு ஏக்கருக்கு. இதில் புரதச்சத்து 9.06 சதம். நார்ச்சத்து 34.6 சதம் இருக்கும். ஏக்கருக்கு பசுந்தீவன மகசூல் வருடத்திற்கு 4 அறுவடையில் 16 டன் கிடைக்கும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
எனவே அதிக தீவன விளைச்சல் கொடுக்கக்கூடிய தீவன ரகங்களை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் சமசீராக அளிப்பதன் மூலம் கால்நடைகளின் தீவன செலவினை, குறைத்து பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகள் முன் வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





















