இன்றைக்கு பேரன் விலை குறைஞ்சிருக்கு... நாளைக்கு தாத்தா விலை குறைவாரா?: பொதுமக்கள் செய்யும் காமெடி!!!
கொத்துக் கொத்தா கொத்தமல்லி விலை குறைந்தது கொத்தமல்லி என்று தஞ்சை மக்கள் பாட்டு பாடாததுதான் குறை.
தஞ்சாவூர்: கொத்துக் கொத்தா கொத்தமல்லி விலை குறைந்தது கொத்தமல்லி என்று தஞ்சை மக்கள் பாட்டு பாடாததுதான் குறை. காரணம் என்ன என்கிறீர்களா? வரத்து அதிகரிப்பால் தஞ்சை காமராஜர் காய்கறி மார்கெட்டில் கொத்தமல்லி விலை குறைந்தது ஒரு கட்டு ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு திருச்சி, ஓசூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதேபோல் தஞ்சையில் இருந்து வெளியூர்களுக்கும் விற்பனைக்காக கொத்தமல்லி அனுப்பி வைக்கப்படுகிறது.
மருத்துவக்குணங்கள் நிறைந்த கொத்தமல்லி இலைகள்
பொதுவாக சமையலுக்கு வாசனை பொருளாக கொத்தமல்லி பயன்படுத்துவது வழக்கம். கொத்தமல்லி இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு உள்ளது. கொத்தமல்லி தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. கொத்தமல்லி இலைகளை இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் சமையல்களில் அதிகமாக பயன்படுத்துவது உண்டு. கொத்தமல்லி இலையின் அனைத்து பகுதிகளும் உண்ணக்கூடியவையாக உள்ளன.
கொத்தமல்லி விதைகள் தனியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை கி.மு. 5000 க்கு முன்பு இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி என எல்லா விட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கொத்தமல்லி இலைகளில் 11 அத்தியாவசிய எண்ணெய்கள் காணப்படுகிறது. இதில் நிறைவுற்ற கொழுப்பு மிகக் குறைந்த அளவே உள்ளது. இதில் லினோலிக் அமிலம் காணப்படுகிறது. இதில் ஏராளமான சுகாதார நன்மைகள் காணப்படுகிறது.
அள்ளிப்போட்ட கொத்தமல்லியை கிள்ளிக்கூட போடலையே
ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக கொத்தமல்லி சமையலில் கிள்ளி போட்டு சமைத்தனர். அதற்கு காரணம் விலை உயர்வு தான். காய்கறிகள் வாங்கினால் கொத்தமல்லி கொசுறு கொடுப்பது கடைக்காரர்களின் வழக்கம். ஆனால் வரத்து குறைந்ததால் கடந்த வாரத்தில் கட்டு ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் கொத்தமல்லியை வியாபாரிகள் கொசுறாக கூட கொடுக்கவில்லை. இதனால் சமையலுக்கு அள்ளி போட்ட கொத்தமல்லியை கிள்ளி போட்டனர் குடும்பத்தலைவிகள். இந்நிலையில் தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி வரத்து அதிகரித்தது. இதனால் உச்சத்தில் இருந்த அதன் விலை கிடுகிடுவென்று குறைந்துள்ளது.
வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது
வரத்து அதிகரிப்பால் கொத்தமல்லி 1 கட்டு ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவு காரணமாக வழக்கத்தைவிட அதிக அளவில் கொத்தமல்லியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். இனி கொத்தமல்லி சட்னி, கொத்தமல்லி காரப்பொடிதான் என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
புதினா விலை உயர்ந்தது
உங்க மகிழ்ச்சிக்கு நான் ஆப்பு வைக்கிறேன் என்பது போல் கொத்தமல்லி விலை குறைந்த நேரத்தில் நான் உச்சத்திற்கு போகிறேன் என்று புதினா விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கட்டு ரூ.50க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி மருத்துவக்குணங்கள் நிறைந்த கொத்தமல்லி விலை உயர்ந்தால் புதினா விலை குறைவதும், கொத்தமல்லி விலை குறைந்தால் புதினா விலை உயர்வதுமாக சீசா பலகை போல் உள்ளது. விஜய் படத்தில் வரும் காய்கறி காமெடியில் பேரன், பேத்தி கொடுப்பா என்று கொத்தமல்லி, கறிவேப்பிலையை கேட்பார். இப்போ கறிவேப்பிலையும், புதினாவும் நாங்க கேட்கிறோம் என்று நகைச்சுவையாக மக்கள் கூறி சென்றனர்.