தொடர்ந்து பெய்து வரும் மழை... தஞ்சை, அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தஞ்சாவூர்: தொடர் கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்டக் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இன்று காலை அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் பல மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 24ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி அறிவித்துள்ளார்.






















