மயிலாடுதுறையில் தொடர் மழை - காவல்நிலைய மதில் சுவர் சாலையோரம் இடிந்து விழுந்தது
பழைய காவல் நிலைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு காவல்துறைக்கே பயனுள்ள கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று காவலர்களும் பொதுமக்களும் கோரிக்கை
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் பயன்பாடு இல்லாமல் சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள பழைய காவல் நிலைய 10 அடி கட்டிட சுவர் விழுந்தது. மயிலாடுதுறை நகரில் கூறைநாடு பகுதியில் மயிலாடுதுறை காவல் நிலையம் அமைந்துள்ளது. முன்னர் ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த மயிலாடுதுறை காவல் நிலையம் சிதிலமடைந்ததால் கடந்த 2000 ஆம் ஆண்டு அதன் அருகிலேயே புதிய காவல் நிலையம் கட்டப்பட்டது. அதனுடன் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மயிலாடுதுறை காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் இவை அனைத்தும் ஒரே இடத்தில் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் மயிலாடுதுறை இயங்கி வந்த தற்போது பயன்பாடற்ற காவல் நிலையத்தின் பழைய ஓட்டு கட்டிடம் சிதிலமடைந்து இருந்து வருகிறது. இக்கட்டிடத்தில் மரம், செடிகள் என புதர் மண்டி காட்சி அளிக்கிறது. மேலும் அவ்வப்போது கட்டிடத்தின் ஒரு சில பகுதிகள் இடிந்து வந்தது.
கட்டிடம் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய சாலையில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மீது இடிந்து விழுந்தது உயிரிழப்பை ஏற்படுத்தும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதை அடுத்து பழைய காவல் நிலைய கட்டிடத்தை அங்கிருந்து இடித்துவிட்டு பயனுள்ள அந்த இடத்தில் அரசுக்கு பயனுள்ள வேறு கட்டிங்கள் கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையில் சேதம் அடைந்த பழைய காவல் நிலைய கட்டிடத்தின் 10 அடி உயரமுள்ள சுவர் இடிந்து சாலையில் நடுவே விழுந்தது. இதில் நல் வாய்ப்பாக எந்தவிதச் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் சாலையில் குறுக்கே சுவர் விழுந்ததால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பு உடனடியாக சிதிலமடைந்து வரும் பழைய காவல் நிலைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு காவல்துறைக்கே பயனுள்ள கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று காவலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.