தஞ்சாவூரில் சதய விழாவை ஒட்டி சோழப் பேரரசு வட்டச் சுற்றுலா
9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழப் பேரரசின் ஆட்சி முறை, கட்டிடக்கலை, சிற்பக்கலை, போர்கலை, வாழ்வியல் முறை, வழிபாட்டு முறை, சமய வளர்ச்சி பணிகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப் பேரரசு வட்டச் சுற்றுலா நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பர்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.
நடப்பாண்டு ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் வரும் 9ம் தேதி காலை தொடங்குகிறது. அன்று மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து, பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த சதய விழாவை முன்னிட்டு நடந்த இச்சுற்றுலாவை தமிழ் பல்கலைக்கழக மேலாளர் முதன்மையர் தெய்வநாயகம் சோழர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி துவக்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 25 நபர்கள் கலந்து கொண்டனர். இச்சுற்றுலாவை வரலாற்று அறிஞர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அய்யம்பேட்டை செல்வராஜ் வழிநடத்தினார்.
இச்சுற்றுலா காலை 7 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொடங்கியது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழப் பேரரசின் சிறப்பு வாய்ந்த இடங்களான திருப்பழனம், திருவைகாவூர், திருப்புறம்பியம் போர்க்களம், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள் செய்முறை விளக்கம், திருவலஞ்சுழி, தாராசுரம், சோழ மாளிகை, பட்டீஸ்வரம் பஞ்சவன் மாதவி பள்ளிப்படை கோயில், பழையாறை மாட கோயில் மற்றும் சோமநாதர் கோயில், உடையாளூர் கைலாசநாதர் கோயில், புள்ளமங்கை ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, மீண்டும் தஞ்சை பெரிய கோவிலில் முடிந்தது.
9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழப் பேரரசின் ஆட்சி முறை, கட்டிடக்கலை, சிற்பக்கலை, போர்கலை, வாழ்வியல் முறை, வழிபாட்டு முறை, சமய வளர்ச்சி பணிகள் குறித்த விளக்கங்கள் பயணத்தின் போது விரிவாக அளிக்கப்பட்டன.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மைய செயலாளர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு பழையாறை நகரின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இருவேளை சிற்றுண்டி மற்றும் கையேடு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் இச்சுற்றுலா சிறப்பாக வடிவமைக்கப்பட்டு சோழர்களின் சிறப்புகளை தெளிவாக அறியக் கூடிய வகையில் இருந்ததாகவும், இது மிகவும் பயனுள்ளதாகவும் மனநிறைவாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இத்தகைய சுற்றுலாவை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.