சூழ்ச்சியில் சிக்கிக்காதீங்க... காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்
நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும், உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு லாப விலையை, அடிப்படை விலையாக நிர்ணயம் செய்து அதனைச் சட்டமாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை வேண்டும்.
தஞ்சாவூர்: சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது எதற்காக தெரியுங்களா?
காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் தஞ்சாவூரில் நேற்று, "மேக்கேதாட்டு அணையை தடுப்போம், ராசி மணல் அணையை மறுப்போம்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு காவிரி உரிமைப்மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன் தலைமை வகித்தார். துரை.ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மத்திய அரசின் மறைமுக ஆதரவுடன், கர்நாடக அரசு காவிரியில் மேக்கேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணைகட்ட திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர், மத்திய அரசின் நீராற்றல் துறை தலைவராக இருந்தபோது, மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசிடமிருந்து திட்ட அறிக்கையை கேட்டு வாங்கினார். பின்னர் அதை ஏற்றுக் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்ததார். இதனால் அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இந்த மேக்கேதாட்டு அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படுவதால், உடனடியாக மேக்கேதாட்டு அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி நீர் தமிழகத்திற்கு கொடுக்கக் கூடாது என்பதற்காவே இந்த மேக்கேதாட்டு அணை திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதே போல், காவிரி ஆற்றின் குறுக்கே ராசி மணல் என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசு அங்குள்ள விவசாயிகள் மூலம், தமிழக விவசாயிகளிடம் நயவஞ்சகமாக பேசி, ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்துவதை தடுக்க வேண்டும். இது முற்றிலுமாக காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு தரக்கூடாது என்பதற்கான நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக விவசாயிகளை பலிகடாவாக்க கர்நாடக அரசு முயல்வதால், காவிரி டெல்டா விவசாயிகள் கர்நாடக அரசின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்துக்கு மாதந்தோறும் காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் நிறுவனங்களே அதிக அளவில் பயன்பெறுவதால், இந்த திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை கொண்டு, தமிழக அரசே பயிர் காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்திட வேண்டும்.
தமிழகத்தில் நீர் ஆதாரங்களான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, ஆண்டுதோறும் பராமரிக்க வேண்டும். மேலும், தேவையான இடங்களில் ஆறுகளில் தடுப்பணைகளை கட்டி, நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளதை, மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். டெல்டாவில் சிப்காட் தொழிற்சாலைகளை அமைப்பதை கைவிட வேண்டும்.
நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும், உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு லாப விலையை, அடிப்படை விலையாக நிர்ணயம் செய்து அதனைச் சட்டமாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை வேண்டும்.
நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500ம், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலையை வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.