Cauvery issue: காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு
எஞ்சியுள்ள குறுவை பயிர்களை பாதுகாக்க காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்: எஞ்சியுள்ள குறுவை பயிர்களை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டியக்கத்தைச் சார்ந்த திமுக விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ். விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:
நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் நிகழாண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.
காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்டப் போராட்டங்கள் நடந்தது. தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.
டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடியை தொடங்கவும் உடன் காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூரில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடகத்தில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசு பல முறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம், மாநில பொதுச் செயலர்கள் பி.எஸ். மாசிலாமணி, சாமி. நடராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நா. பெரியசாமி, விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், கூட்டியக்க நிர்வாகிகள் காளியப்பன், சு. பழனிராஜன், என்.வி. கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.