’நான் செத்தாலும் எம் மக்கள் வாழனும்’ -மணல் குவாரியை திறக்க கோரி தீக்குளித்த மாட்டு வண்டி தொழிலாளி
’’நான் எப்படியும் உயிரிழந்து விடுவேன், எம் மக்கள் 1000 குடும்பம் நல்லா வாழணும். அரசாங்கம் மாட்டு வண்டிக்கென மணல் குவாரியை திறக்கணும்''
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவைச் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (37) மணல் வண்டி தொழிலாளி, தனது ஊரில் தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ’’நான் எப்படியும் உயிரிழந்து விடுவேன், எம் மக்கள் 1000 குடும்பம் நல்லா வாழணும். அரசாங்கம் மாட்டு வண்டிக்கென மணல் குவாரியை திறக்கணும்'' என உயிருக்கு ஆபத்தான நிலையிலும், பேசி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி பரவலாக இணையதளங்களில் வெளியானது. இதனை பார்ப்பவர்கள் கண்கள் கலங்க வைத்துள்ளது.
தகவலறிந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மணல் மாட்டு வண்டி தொழிலாளி பாஸ்கரை, சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்று, சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை சந்தித்து கேட்டுக் கொண்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் தொழிலாளி பாஸ்கருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டம் உள்ளிட்டு, தமிழகம் முழுவதும் மூடப்பட்ட மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு முன்பாக உள்ளிருப்பு போராட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மணல் மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் திருவிடைமருதூர் கோவிந்தராஜ், தாராசுரம் தங்கையன், அதிராம்பட்டினம் சோமசுந்தரம், சேதுபாவாசத்திரம் அலெக்சாண்டர், திருச்சிற்றம்பலம் செல்வம், பட்டுக்கோட்டை மூர்த்தி, பூதலூர் இம்மானுவேல், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில், தமிழக முதல்வர், உடனடியாக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே, மாட்டு வண்டியில் மணல் எடுப்பதற்காக குவாரி திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிற பாஸ்கருக்கு உயர்சிகிச்சை, குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்படும் நிலையில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.