தறிகெட்டு ஓடிய கார் மோதி கர்பிணி உட்பட 3 பேர் உயிரிழப்பு - காரை நொறுக்கி குளத்தில் தள்ளிய மக்கள்...!
வைத்தீஸ்வரன் கோயில் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி கர்பிணி உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் காரை ஓட்டிய ஓட்டுநர் காரை விட்டுவிட்டு ஓட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலை அடுத்த கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் 36 வயதான இவர், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணி வயது (30) என்பவரை மருத்துவ பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கற்கோயில் உடையாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக தாறுமாறாக வந்த கார், புருஷோத்தமன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் கர்ப்பிணியான தமிழ்வாணியும் அவரது கணவர் புருஷோத்தமனும் தூக்கி வீசப்பட்ட பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து வேகமாக சென்ற கார் 100 நாள் வேலை முடித்து விட்டு சாலையோரம் நடந்து சென்ற உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மனைவி 52 வயதான தையல்நாயகி மற்றும் சந்திரகாசு மனைவி 56 வயதான ராணி ஆகியோர் மீது மோதியது இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த தையல்நாயகி மற்றும் ராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழந்தார். ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். டிரைவரின் அஜாக்கிரதையால் தறிகெட்டு ஓடி வந்த கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி அவரது கணவர் மற்றும் மூதாட்டி உள்ளிட்ட மூன்று உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும், விபத்து நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கி குளத்திற்குள் தள்ளிவிட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் ஒட்டுநரை விரைவில் கைது செய்வாத கூறி அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இவ்விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டினாரா அல்லது ஏன் கார் தாறுமாறாக ஓடியது என விசாரணை மேற்கொண்டு உள்ளதுடன், தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.