தஞ்சாவூரில் 150 அடி உயர ராஜராஜசோழன் சிலை அமைக்க முயற்சி - மன்னார்குடி ஜீயர் ஆதரவு
''கோயில் வாசலில் இருக்க கூடிய தர்மத்துரோகி ராமசாமிநாயக்கர் சிலையை அகற்றி விட்டு, தர்ம ரஷ்கரான ராமானுஜர் சிலையும், மாமன்னர்கள் சிலையையும் வைக்க வேண்டும்''
தஞ்சாவூர் மாவட்டம், வண்ணாரப்பேட்டை ஊராட்சி புதிய பைபாஸ் பகுதியில் மாமன்னர் ராஜராஜசோழனுக்கு மரியாதை செய்யும் விதமாக 150 அடி உயரத்தில் பிரமாண்ட திருமேனி அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று 17ம் தேதி நடக்கும் என்று இந்து எழுச்சி பேரவை தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் அழைப்பிதழ் அடித்து வெளியிட்டார். அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தருமபுரம் ஆதினம் 27வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகிப்பார். சர்வமய குருமார்கள் முன்னிலை வகிப்பார்கள் என்று அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலை அமைக்கும் இடத்திற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று கூறி காலை முதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். வல்லம் டி.எஸ்.பி. பிருந்தா தலைமையில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், எஸ்.ஐ.,க்கள் சித்ரா, செந்தமிழன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும் பாதுகாப்பு பணிகளை ஏடிஎஸ்பி ரவிச்சந்திரன் பார்வையிட்டார். தொடர்ந்து அடிக்கல் நாட்டுவிழாவிற்காக வந்த இந்து எழுச்சி பேரவை தலைவர் சந்தோஷ்குமாரின் உரிய அனுமதி வாங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் சந்தோஷ்குமார் உட்பட 20 பேரை கைது செய்தனர். முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவிற்காக, ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் எனும் பெரியகோயிலிருந்து, ராஜாரசோழனுக்கு அடிக்கல் நாட்டிடுவோம், இந்து தர்மத்தை காத்திடுவோம், தமிழர் கலாச்சாரத்தை வளர்த்திடுவோம் என்று கோஷமிட்டுவிட்டு அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மன்னார்குடி ராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு இந்துக்கள், இந்து மகாராஜா என்பதற்காக சிலை அமைக்கூடாது என்கிறார்கள். இந்த சிலை அரசாங்கத்தின் சொத்துக்களில் அமைக்கவில்லை. எங்களுடைய சொந்த இடத்தில் சொந்த பணத்தில் கட்டுகின்றோம். ராஜராஜசோழன், இந்து ராஜாக்களை பற்றி தெரியாக கலெக்டர், டிஎஸ்பி, இருப்பதால், சூழ்ச்சியுடன் தடுக்கின்றார்கள். இதற்கு கோர்ட் ஆர்டரில் எந்த ஒரு அரசியல்வாதிகள் சிலையும் இருக்ககூடாது, எடுக்க வேண்டும் என்ற ஆணையுள்ளது. ஏன் இந்த தமிழக அரசு மற்றும் போலீசாரால், கோயில் வாசலில் உள்ள தர்மத்துரோகி சில பேருடைய சிலையை கூட எடுக்க முடியாமல் உள்ளனர். தர்மத்தின் வழியில் வாழ்ந்து, மகான் மாமன்னர் ராஜராஜசோழனின் சிலையை வைக்ககூடாது என்று சொல்வது வெட்ககேடு. இது போன்ற செயல்கள் தொடர்ந்து செய்தால், இந்துக்கள் தொடர்ந்து போராட்டங்கள் செய்ய வேண்டிய நிலை வரும். அனைத்து கோயில் வாசலில் இருக்க கூடிய தர்மத்துரோகி ராமசாமிநாயக்கர் சிலையை அகற்றி விட்டு, தர்ம ரஷ்கரான ராமானுஜர் சிலையும், மாமன்னர்கள் சிலையையும் வைக்க வேண்டும். ராஜராஜசோழன் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தியே தீர்வோம் என்றார்.