அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டங்களை தந்ததால் பாதிப்பு - அமைச்சர் மெய்யநாதன்
அதிமுக ஆட்சியில் 110 வீதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் வெறும் வெற்று அறிவிப்புகள் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து நேற்று 2.10 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி பகுதியில் 3000 மணல் மூட்டைகள் மற்றும் 500 சவுக்கை மரக்கட்டைகளை வைத்து கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே தற்பொழுது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் அளக்குடி பகுதியை கடந்து செல்கிறது. அளக்குடி பகுதியில் எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூட்டைகள் மற்றும் சவுக்கை கட்டைகளை வைத்து கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவகிறது. இந்த பகுதியில் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாதவாறு தமிழக முதல்வர் பார்வைக்கு எடுத்துச் சென்று நிரந்தர தீர்வு காணப்படும் என்றார். தொடர்ந்து பேசியவர், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பால் முதலைமேடுதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட இரண்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? ஆதனூர் பகுதியில் தடுப்பனை கட்டிக்கொண்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு சில பகுதிகளில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளதாக? கேட்ட கேள்விக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு வெற்று அறிவிப்பு மட்டுமே யாரும் திட்டங்களை ரத்து செய்ய முடியாது. நிதி ஒதுக்கீடு செய்யாமல் மக்களுக்கான திட்டங்களை அவர்கள் தந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுதைய தமிழக முதலமைச்சர் ஊரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கு எங்கெல்லாம் தடுப்பணைகள் அமைக்க வேண்டுமோ அதற்கான கருத்துக்கள் பெற பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்