தஞ்சையின் வரலாற்று சின்னம்! அரண்மனையை புனரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக அரசு - குவியும் பாராட்டு
தஞ்சாவூரின் பெருமைக்கும் மேலும் பெருமை சேர்க்கும் வரலாற்று பொக்கிஷமாக போற்றப்படும் அரண்மனையை புனரமைக்க தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரின் பெருமைக்கும் மேலும் பெருமை சேர்க்கும் வரலாற்று பொக்கிஷமாக போற்றப்படும் அரண்மனையை புனரமைக்க தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சையின் பெருமையின் மற்றொரு சிகரம்
தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் பெரிய கோவிலுக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடியது மராத்தா மாளிகை என்னும் அரண்மனை வளாகம். மிகவும் பழமையான மண்டபமாக கூறப்படும் இதில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், போர்க்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
110 ஏக்கர் பரந்து விரிந்த அரண்மனை வளாகம்
இந்த அரண்மனை வளாகம் மிகப் பெரியது. 110 ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்தது. இந்த வளாகத்தினுள் பல அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இங்குதான் சரஸ்வதி மஹால் நூலகமும், தஞ்சைக் கலைக் கூடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் மிக மிக பழமையானவை. அதிலும் தஞ்சை சரஸ்வதி நூலகம் தான் ஆசியாவிலேயே மிகப் பழமையானது. அதுமட்டுமில்லாமல், உலகில் இரண்டாவது பழமையானது.
காண்போரை வியக்க செய்யும் ஓவியங்கள்
இங்குள்ள ஓவியங்கள் காண்போர் கண்களை வியக்கச்செய்யும். இமைகளை மூடவிடாமல் அழகில் ஆழ்த்தும் அற்புத படைப்புகள் என்றால் மிகையில்லை. அனைவரது கருத்தும் இதை ஒத்துதான் இருக்கும். அந்தளவிற்கு அழகில் மயக்கும் ஓவியங்கள் நிறைந்தது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு
மராத்தா மாளிகையை புனரமைக்கும் பணியினை தற்போது தமிழக அரசு செய்து வருகிறது. கலைக்கூடம் தர்பார் மகால், சார்ஜா மாடி, சரஸ்வதி மஹால், நூலகம் ஆகியவை 25 கோடி ரூபாய் நிதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரம் ஆண்டு கால ஐம்பொன் சிலை உள்ள கூடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்கணும்
பழமை வாய்ந்த சிலைகளை நாம் பாதுகாப்பதால் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வரலாற்றை பாதுகாக்க தஞ்சை அரண்மனை வளாகத்தை சீரமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது: வரலாற்று சின்னமான தஞ்சை அரண்மனை புனரமைக்கப்படுவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 1000 ஆண்டுகால ஐம்பொன் சிலைகள் உள்ள கலைக்கூடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.