பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டது எதற்காக? - உண்மையை போட்டு உடைத்த தமிழ்மகன் உசேன்
இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக செய்தது. ஆனால் திமுக என்ன செய்தது. வரும் காலங்களில் அதிமுகவை இஸ்லாமிய மக்கள் ஆதரிக்க வேண்டும்.
தஞ்சாவூர்: பாஜகவுடன் கூட்டணி வைத்தது எதற்காக என்று உண்மையை போட்டு உடைத்தார் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுகதான் உண்மையான திமுக
திமுக என்றால் திருட்டு முன்னேற்ற கழகம் இல்லையென்றால், திருக்குவளை திருட்டு கழகம் எனவும் கூறலாம். அந்த கட்சி தான் தற்பொழுது ஆட்சியில் உள்ளது. உண்மையான திமுக எங்கு இருக்கிறது என்று சொன்னால், தந்தை பெரியார் வளர்த்த, திராவிடர் கழகம் எங்கு இருக்கிறது என்று சொன்னால், எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்தது யார்?, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என சொன்னது யார்?, ஜெயலலிதா தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பின்னர் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டேன், இனி என் வாழ்க்கையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அறிவித்தார். அதுதான் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கூட்டணி வைத்தது இதற்காகதான்
எடப்பாடி பழனிச்சாமி தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். ஏனென்றால் நான்கரை ஆண்டு ஆட்சியைக் காப்பாற்ற பிஜேபியுடன் கூட்டணி வைத்து தான் ஆகணும். அது இஸ்லாமிய தோழர்களுக்கு தெரியாதது அல்ல. ஆட்சியைக் காப்பாற்ற தான் பாஜகவுடன் கூட்டணி அதிமுக வைத்தது. தற்போது நிலைமை மாறிவிட்டது.
இனி கிடையவே கிடையாது பாஜவுடன் கூட்டணி
பாஜகவுடன் கூட்டணி எந்த காலத்திலும் வரவே கிடையாது. கட்சியின் அவைத்தலைவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக செய்தது. ஆனால் திமுக என்ன செய்தது. வரும் காலங்களில் அதிமுகவை இஸ்லாமிய மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.