(Source: ECI/ABP News/ABP Majha)
பிரதமர் மோடிக்கு மாயவரத்தில் இருந்து இந்த தாடி சார்பில் நன்றிகள் - டி. ராஜேந்தர்
ஒருதலை ராகம் படத்தை படமாக்கிய தரங்கம்பாடி ரயில் சேவை 35 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்து, மீண்டும் அந்த ரயிலை இயக்க மத்திய அரசுக்கு இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை மண்ணின் மைந்தர் நடிகர் டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிவந்த நிலையில், தான் பிறந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள சியாமளாதேவி கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் நேற்று வழிபாடு நடத்திவிட்டு, அதனை அடுத்து இன்று அவர் மீண்டும் ரயில் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவரை இரயில்வே நிலையத்தில் கண்ட பொதுமக்கள் ஆர்வமுடன் அவருடன் சேர்ந்து நின்று தங்கள் செல்போன்களில் புகைப்படமும், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது மகன் சிலம்பரசன் வற்புறுத்தியதால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து இங்கு நிற்கிறேன். எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த மயிலாடுதுறை மண்தான் என்றார். மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கு செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏறி சென்று மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் படித்ததாகவும், அதே ரயிலில் "ஒருதலை ராகம்" படம் பிடித்ததாகவும் அவருக்கே உறுத்தான பாணியில் எதுகை மோனையுடன் கூறினார். ஆனால், அந்தத் தரங்கம்பாடி ரயில் இன்றைக்கு இல்லை அந்தத் தடம் தான் இருக்கிறது. ரயில் வழித்தடம் இல்லை தண்டவாளம் இல்லை என்பதை பார்க்கும் போது என் நெஞ்சம் கணக்கிறது என்று சொல்லும் போதே அவர் கண்ணில் இருந்து கண்ணீர் துளிர்த்து வழிந்தோடியது.
ஏழை எளிய மக்கள் மீனவ மக்கள் அனைவரும் பயன்படுத்திய இந்த தரங்கம்பாடி ரயிலை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று இந்த மயிலாடுதுறை மண்ணில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்த டி.ராஜேந்தர், மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மயிலாடுதுறை ரயில் நிலையத்தை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை காணொளி மூலம் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். என்னுடைய மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு செலவழிப்பது 20 கோடி அந்தத் திட்டத்தை உருவாக்கித் தந்தது பிரதமர் மோடி மாயவரத்தில் இருந்து இந்த தாடி என்னுடைய மண்ணின் சார்பிலும் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
மாயூரநாதர் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில், ஆடி மாதம் கோயிலுக்கு வந்து விட்டதாகவும் என் மண்ணில் உள்ள கோயில்களை உள்ளுக்குள்ளேயே தரிசிப்பதாகவும் அந்த அளவிற்கு தான் மாறிவிட்டதாகவும் உள்ளத்துக்குள்ளேயே கடவுளை பூஜிக்க ஆரம்பித்து விட்டதாகவும் கும்பாபிஷேகம் நடக்கிறது என்று சொன்னால் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அபிஷேகங்கள் நடக்கிறது என்று தெரிவித்தார்.