I.N.D.I.A Meeting: இந்தியா கூட்டணியின் அடுத்தக் கூட்டத்தில் அதிரடி முடிவுகள்...செய்தி சொன்ன சஞ்சய் ராவத்
இந்த கூட்டத்தில், மூத்த எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட ஐந்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டம், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று உறுதி செய்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், "கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்" என தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டம்:
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி விருந்தளிப்பார் என்றும் அதை தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்த கூட்டத்தை நடத்த உள்ளது.
முதலில் இந்த கூட்டம், ஆகஸ்ட் மாதம் 25, 26 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகள் ஆளாத மாநிலத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை. ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் ஆளும் பிகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டமும் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள அதிரடி முடிவுகள்:
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 5 முதல் 6 கூட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மும்பையில் நடைபெற உள்ள கூட்டத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்த முடிவுகளை எடுக்க 11 உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து இறுதி செய்வதற்கு ஒரு துணைக்குழுவும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகள், பேரணிகள், மாநாடுகளை திட்டமிட மற்றுமொரு கமிட்டியும் அமைக்கப்பட உள்ளது.
பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறிய மகாராஷ்டிராவில் கூட்டம் நடத்தப்படவிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் பிளவுப்பட்டு, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அவர்களின் கோட்டையாக கருதப்படும் மும்பையில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
குறிப்பாக, பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சரத் பவார் கலந்து கொண்டது எதிர்க்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டும் இன்றி, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.