48 மணிநேரத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? அது எப்படி? - இவர் சொல்றத கேளுங்க
இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும்.
தஞ்சாவூர்: முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர் என்று சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று ஸ்பர்ஸ்(SPARSH) திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு, வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும், குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார்.
முகாமில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று பல ஆண்டுகளாக ஓய்வூதியம் உட்பட பணப் பலன்களை பெறாமல் இருந்தவர்களுக்கு அதற்கான ஆணைகளும், காசோலைகளும் இந்த முகாமில் வழங்கப்பட்டுள்ளது.
முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும். மேலும் இதற்காக சிறப்பு செல்போன் எண் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கவில்லை என தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கள் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி யார் கேட்டாலும் ஓடிபி 6 இலக்க எண் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டாம். சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து மட்டுமே வழங்க வேண்டும்.
அதே போல் டிஜிட்டல் கைது என்பதை யாரும் நம்ப வேண்டாம், அது போன்ற எந்த முறையும் இந்தியாவில் கிடையாது, நீங்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். தமிழகத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான எந்த கோரிக்கை மனுக்களும் தற்போது நிலுவையில் இல்லை. இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
ஓய்வூதியம் பெறுவர்கள் இறந்துவிட்டால் அவர்களது உறவினர்கள் இறப்பு சான்றிதழை பெற்று எங்களுக்கு செல்போனில் அனுப்பி வைத்தால், நாங்கள் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் நாடு முழுவதும் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான குறைதீர்க்கும் சேவை மையம் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி குறைகளை கூறினாலும், அதற்கான தீர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்பாடுகளை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் இணைந்து செய்திருந்தது.