ஏபிபிநாடு செய்தி எதிரொலி... ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாசன வசதி பெறும் பேய்வாரி வாய்க்காலை தூர்வாரும் பணிகள் மும்முரம்
8 நம்பர் கரம்பை, களிமேடு, பிள்ளையார்நத்தம் உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக செல்லும் பேய்வாரி வாய்க்காலில் மண்டிக்கிடந்த செடி, கொடிகளை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என்று ஏபிபிநாடு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக பேய்வாரி வாய்க்கால் ஓடுகிறது. இதன் வாயிலாக 8 நம்பர் கரம்பை, களிமேடு, பிள்ளையார்நத்தம் உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பேய்வாரி வாய்க்கால் சக்கரசாமந்தம், களிமேடு வழியாக செல்கிறது. இந்த பேய்வாரி வாய்க்கால் முறையாக முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் செடி, கொடிகள் மண்டி வாய்க்காலா அல்லது காடா என்று தெரியாத அளவிற்கு மாறி இருந்தது. இதனால் கடந்தாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது தண்ணீர் செல்வதில் பெரும் இடர்பாடு ஏற்பட்டது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்த பேய்வாரி வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி, சக்கரசாமந்தம், களிமேடு உட்பல பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் உள்வாங்கும் இந்த பேய்வாரி வாய்க்கால் சிறிய மழைக்கு கூட தாங்காது என்பது போல் மாறி இருந்தது. மேலும் இந்த பேய்வாரி வாய்க்காலில் குப்பைகளும் கொட்டப்படுவதால் தூர்ந்து போய் காணப்பட்டது. இந்த கோடைகாலத்திலேயே இந்த பேய்வாரி வாய்க்காலை குருவாடிப்பட்டி தலைப்பில் இருந்து வண்ணாரப்பேட்டை, ராமநாதபுரம் வழியாக முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால் சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி பாய்ந்து செல்லும்.
இல்லாவிடில் மழை பொழிவு அதிகம் இருந்தால் வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் வயல்களில் தேங்கி சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர் வாரி தண்ணீர் தடையின்றி ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஏபிபிநாடும் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஆறு, பாசன வாய்க்கால்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து இந்த பேய்வாரி வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் தொடங்கின. மண்டிக்கிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு மண்மேடுகள் தண்ணீர் பாய்ந்து செல்லும் அளவிற்கு தூர் வாரப்பட்டது. மேலும் தூர்வாரிய மண்ணை கரையில் கொட்டி பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் செய்தி வெளியிட்ட ஏபிபி நாடு மற்றும் பணிகளை மேற்கொண்டதற்காக அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். மேலும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















