மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து கலக்கும் இளம் பட்டதாரி பெண் விவசாயி!
பிபிஏ பட்டதாரியாக இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில் மரவள்ளிகிழங்கு சாகுபடி மேற்கொண்டு அருமையான வருமானத்தை பெற்று வருகிறார் இளம் பெண் விவசாயி ஆரோக்கிய பிரியா (24).
தஞ்சாவூர்: பிபிஏ பட்டதாரியாக இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில் மரவள்ளிகிழங்கு சாகுபடி மேற்கொண்டு அருமையான வருமானத்தை பெற்று வருகிறார் இளம் பெண் விவசாயி ஆரோக்கிய பிரியா (24). இது மட்டுமில்லைங்க... நெல், கடலை, சோளம், வாழை, தென்னை என்று தங்களின் 3 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறார்.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யும் பட்டதாரி இளம்பெண்
3ம் முறையாக நீண்ட கால பயிரான மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார். வயலில் கிழங்கு செடிகள் மத்தியில் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்த அவர் கூறியதாவது: அப்பா இறந்து 5 வருஷம் ஆகுது. அப்பா இருக்கும் வரைக்கும் எல்லாமே அவர்தான். அவருக்கு ஹெல்ப்பா சின்ன, சின்ன வேலைகள்தான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். நான் ஒரு பெட்ரோல் பங்க்கில் உதவி மேனேஜரா வேலை பார்த்தேன். 5 வருஷத்துக்கு முன்னாடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பா இறந்த பின்னாடி பெரிய அளவில் பாதிப்புதான். விவசாயம் பற்றி ஏதோ கொஞ்சம், கொஞ்சம் தெரியும். குத்தகைக்கு வயலை விட்டோம். அதுலயும் சில பிரச்னைகள். அப்போதான் இந்த மரவள்ளிக்கிழங்கு பற்றி தெரிய வந்தது. அப்போ அம்மா அருள்மேரியும், நானும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். குத்தகைக்கு நிலத்தை விடறதைவிட நாமளே சாகுபடி செய்வோம் என்று.
நிலத்தின் மீது முழு நம்பிக்கை வைச்சோம்
நிலத்து மேல முழு நம்பிக்கை வைச்சு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில ஒரே சாகுபடி மட்டும் செய்யாம நெல், சோளம், கடலை, எள், உளுந்துன்னு சாகுபடி செய்தோம். கொஞ்சம் கொஞ்சமாக சாகுபடி முறைகளை கத்துக்கிட்டேன். விலை கட்டுப்படியானா சோளத்தை பச்சையாக உடைச்சுக்க விட்டுடுவோம். விலை கட்டுப்படி ஆகலைன்னா நல்லா காய்ந்து மிஷனில் உதிர்த்து வியாபாரிகளிடம் விற்பனை செய்வோம். அப்போதான் சிப்ஸ்க்கு மட்டும் பயன்படும் வெள்ளை மரவள்ளிக்கிழங்கு பற்றி உறவினர் மூலம் தெரிய வந்தது. 10 மாதம் காலம் சாகுபடி பயிர் என்று தெரிய வந்தது. யோசனையாக இருந்தாலும் செய்வோம் என்று முடிவு செஞ்சோம்.
சிப்ஸ் போட மட்டும் பயன்படும் வெள்ளை மரவள்ளிக்கிழங்கு
இந்த வெள்ளை மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் போட மட்டும் பயன்படும். இந்த சாகுபடி பற்றி தெரிந்து கொண்டோம். பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். இருந்தாலும் மானாவாரியில் செப்டம்பர் – அக்டோபர் மாதம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலம். நாங்க பம்ப் செட்டில் தண்ணீர் இறைத்தாலும் சொட்டு நீர் பாசனம்தான் செய்கிறோம்.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறைகள்
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 1900-2500 கிலோ, கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும். ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. இதை குச்சிகள் என்றும் சொல்வாங்க. ஒரு முறை சாகுபடி செய்தோம் என்றால் அந்த குச்சிகளையே மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன் பிறகு மூன்றாவது நாள் உயிர் தண்ணீரும் விடவேண்டும். பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் நீர் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் போதுமானது. நாங்க சொட்டு நீர்ப் பாசனம் அமைத்து இருப்பதால் தண்ணீர் தேவைக்கு தகுந்தார்போல்தான் செலவாகும். மேலும் நேரடியாக வேருக்கே தண்ணீர் செல்லும். இதனால் நீர் சேமிக்கப்படும்.
உரம் தெளிப்பது எப்படி தெரியுங்களா?
5ம் மாதம் மற்றும் 7ம் மாதத்தில் உரம் தெளிப்போம். காம்ப்ளக்ஸ், பொட்டாஸ், டிஏபி உரம் தெளிப்போம். செடிகள் நன்கு வளர்ந்து வந்த பிறகு 5ம் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும். இதனால் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியும் காற்றோட்டமும் கிடைக்கும் அதேபோல் கிழங்குக்கான குச்சி ஊன்றிய பின்னர் அதாவது நடவு செய்த 20 வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்ய வேண்டும். பிறகு 3-ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். செடி நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும்.
எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுங்களா?
உரம் செலவு, களை பறித்தல், கவாத்து செய்தல் இப்படி அனைத்திற்கும் சேர்ந்து முழுமையாக ரூ.30 முதல் 35 ஆயிரம் வரை செலவாகும். இது 10 மாத கால பயிர். மொத்த வியாபாரிகளே ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து கிழங்குக்கு தகுந்தார்போல் உடனடியாக பணம் தந்து விடுவாங்க. பெங்களூரில் இருந்து வருவாங்க. முதல்முறை சாகுபடி செய்தபோது குறைந்த லாபம்தான் எடுத்தோம். போன வருஷம் சாகுபடி செய்தபோது 19 டன் அளவிற்கு கிழங்கு கிடைத்தது. இதில் செலவுகள் போக லாபம் ரூ.1.88 லட்சம் கிடைச்சது.
நாங்கள் 2 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு, அரை ஏக்கரில் சோளம், அரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருக்கிறோம். மேலும் வாழை, 150 தென்னை மரங்கள் வளர்க்கிறோம். பெண்கள் விவசாயிகளாக இருந்தால் அறுவடை செய்ய முடியாதுன்னு பலரும் பேசினாங்க. ஆனா அதை உடைத்து இப்போ நாங்களும் விவசாயத்துல கலக்குகிறோம். இப்போ நாங்க கிழங்கு சாகுபடி செய்து நல்ல லாபம் எடுத்ததை பார்த்து இப்போ பலரும் இதையே சாகுபடி செய்யறாங்க. இவ்வாறு அவர் கூறினார்.