முட்டைகளை காக்க கோதுமை நாகத்துடன் மரண போராட்டம் நடத்திய கோழி பரிதாப பலி!
சீர்காழி அருகே அடைகாத்த கோழியின் முட்டைகளை விழுங்க வந்த கோதுமை நாகத்துடன் மரண போராட்டம் நடத்திய கோழி போராடி உயிரை விட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேல செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் தனசீலன். இவர் தனது வீட்டு பின்புறத்தில் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதில் ஒரு கோழி சுமார் 10 முட்டைகளுடன் அடைகாத்துக் வந்துள்ளது. கோழி அடைக்காக்கும் இடத்திற்கு கொள்ளை வழியாக உள்ளே புகுந்த சுமார் 7 அடி நீளம் கொண்ட கோதுமை நாகம் முட்டைகளை விழுங்க முயற்சி செய்துள்ளது. இதனை கண்ட தாய் கோழியானது தனது முட்டைகளை காக்க அந்த கொடிய விஷம் கொண்ட கோதுமை நாகத்துடன் கடுமையாக எதிர்த்து சண்டையிட்டுள்ளது.
ஆனால், தன் முட்டைகளை நாகம் முழுங்க விடாமல் அந்த நாகத்துடன் கடும் மரணப் போராட்டத்தை நிகழ்த்திய கோழி கடைசியில் நாகத்தின் விஷத் தீண்டலால் சத்தத்துடன் துடிதுடித்து கீழே விழுந்துள்ளது. கோழியின் சத்தம் கேட்டு வந்து பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த சில மணி துளிகளில் கோழி பரிதாபமாக உயிரிழந்தது. அப்பொழுது முட்டைக்கு அருகில் பளபள வென படம் எடுத்து கம்பீரமாக கோதுமை நாகம் காட்சி அளித்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் செய்வது அறியாத அச்சத்தில் திகைத்து நின்றனர்.
உடன் பாம்புகளை லாபகமாக பிடிக்கும் பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனை வரவழைத்து, ஏழ அடி நீளம் கொண்ட கோதுமை நாகத்தை பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு போய் பாதுகாப்பாக விட்டனர். தன் முட்டைகளை காக்க கோதுமை நாகத்துடன் பல மணி நேரம் போராடி முட்டைகளை காத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட கோழியை பார்த்து குடும்பத்தினர் சோகமடைந்தனர். மேலும், தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டமும் அச்சுறுத்தலும் அதிகம் காணப்படும் என்பதால், வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி இப்போது இருந்தே குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளை பிடிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மேலும் பாம்புகளை பிடிப்பதற்கான அனைத்து வசதிகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தஞ்சாவூரில் நடந்த படு கொலை தொடர்பாக இருவர் சீர்காழி நீதிமன்றத்தில் சரண்.
தஞ்சாவூர் மாவட்டம் மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே கடந்த 18 -ம் தேதி பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த அரசு நேரடி நெல் சேமிப்பு கிடங்கு காவலாளியான 31 வயதான பிரேம், வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 35 வயதான மணிகண்டன் மற்றும் விலாங்கன் பகுதியை சேர்ந்த 35 வயதான தேவராஜ் ஆகிய இருவரும் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி குற்றவாளிகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.