மயிலாடுதுறையில் டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள டவரில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல்
’’போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும் இதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டல் விடுப்பு’’
மயிலாடுதுறை தீப்பாய்தாள் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் 35 வயதான ரவுடி அம்மாமணி என்கிற மணிகண்டன். இவர் மீது மயிலாடுதுறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சாவிற்பனை, வழிபறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அதுமட்டுமின்றி மயிலாடுதுறை காவல் நிலைய குற்றவியல் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திற்கு வந்த ரவுடி அம்மாமணி என்கிற மணிகண்டன் அங்கு உள்ள போலீஸ்சுக்கான தொலைதொடர்பு டவரில் கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை எடுத்து கொண்டு ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ரவுடி மணிகண்டன் தன்னை நேற்று இரவு போலீசார் தேடி வந்ததாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், போலீசார் பொய்வழக்கு போடுவதாகவும் இதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டல் விடுத்தார்.
உடனடியாக போலீசார் அம்மா மணி என்கிற மணிகண்டனிடம் பேசி கீழே இறங்க வலியுறுத்தினர். அப்போதும் கீழே இறங்காத அவரிடம் அங்கு வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் அம்மாமணியிடம் இனிவரும் காலங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதாக கூறினால் உன்மீது வழக்குப்பதிவு செய்யமாட்டேன் என்று ஒலிபெருக்கியில் கூறி கீழே இறங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் இங்கு வர வேண்டும் என்று ரவுடி மணிகண்டன் கூறியதால் மயிலாடுதுறை வட்டாட்சியர் ராகவன் சம்பவ இடத்திற்கு வந்து ஒலிபெருக்கியில் மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போலீசார் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்தார் அதனைத் தொடர்ந்து ஒரு மணிநேர பேச்சுவார்த்தைக்குப்பின் அம்மாமணி என்கிற மணிகண்டன் கீழே இறங்கினார். தற்கொலை மிரட்டல் விடுத்த அம்மாமணியிடம் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இருப்பினும் தற்கொலைக்கு முயற்சி சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அம்மாமணி மீது தற்கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார்.. உடந்தை மனைவியும் கைது!
மயிலாடுதுறை ரவுடி தற்கொலை மிரட்டல் சம்பவத்தால் காவல்நிலைய பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். தொடர்ந்து தீயணைப்புதுறையினர் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு கருதி வரவழைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.