நாமக்கல் கோழி பண்ணை தீவனத்திற்காக 9.1 டன் ரேஷன் அரிசி கடத்தல் - தஞ்சையில் 3 பேர் கைது
நகர் பகுதியில் பலரிடம் ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல்லிற்கு கோழிப் பண்ணைக்கு அனுப்புவது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம், போலீசார் ஒப்படைத்தனர்
தஞ்சாவூரில் இருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு, 9.1 டன் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக, லாரியில் பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை பகுதியில் கடந்த சில நாட்களாக பொது மக்களிடம் ரேசன் அரிசியை சிறுக சிறுக வாங்கி, மொத்தமாக நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலுள்ள கோழிப்பண்ணைக்கு திருட்டு்ததனமாக கடத்தி வருவதாக குடிமை பொருள் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தஞ்சாவூர் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ப்ரியா, எஸ்.ஐ. விஜய்,ஏட்டு செல்வராஜ், மணிகண்டன் ஆகியோர், மானம்புசாவடி, வைக்கோல் கார தெருவில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, கிடைத்த தகவலின் பெயரில், திடீரொன அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்த போது, அதில் இருந்த 9.1 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்படிருந்தது. அதை பறிமுதல் செய்த போலீார், திருச்சி மாவட்டம் வராகநேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் அருள் (25), அவரது உதவியாளர்களான அய்யம்பேட்டையை சேர்ந்த ஜோதிமுருகன் (26), மானம்புசாவடியை சேர்ந்த காஜா மொய்தீன் (42) ஆகிய மூவரையும் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தஞ்சாவூர் நகர் பகுதியில் பலரிடம் ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல்லிற்கு கோழிப் பண்ணைக்கு அனுப்புவது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம், போலீசார் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் அரிசிகள், கோழி தீவணத்திற்காக அரைக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கான அரிசியை, ரேசன் கடை அலுவலர்களிடம், கூடுதல் விலைக்கு வாங்கி, அரைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றார்கள். தற்போது கடத்தப்பட்ட ரேசன் அரிசி எந்த கடையில் வாங்கியது, ரேசன் கடை அலுவலர்கள் யார் என, தொழிலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேசன் அரிசி கடத்துவதற்கு முயற்சி செய்த லாரி மற்றும் பணியாளர்களை கைது செய்து விசாரித்து வருகின்றோம்.
பெரும்பாலான ரேசன் அரிசிகள், கிராமப்புறங்களிலிருந்து தான் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பொது மக்கள் தகவல் தெரிவித்தால், ரேசன் கடை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள், ரேசன் கடைகளில் அரிசி இல்லை என்று, அலுவலர்கள் கூறினால், உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அப்போது அரிசி கடத்துவது குறித்து தகவல் தெரிய வரும். தஞ்சாவூர் மாவட்டத்தில், இனி வரும் நாட்களில் ரேசன் கடைகளில் அரிசி கடத்துவது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.