கும்பகோணத்தில் விதிகளை மீறி சென்னைக்கு பயணிகளை ஏற்றிய பேருந்துகளுக்கு 80,000 அபராதம்
30 மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியார் டூரிஸ்ட் வாகனங்களுக்கு மொத்தம் 80 ரூபாய் ஆயிரம் அபராதம் விதிப்பு
தீபாவளி பண்டிகை கடந்த 4ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடுவதை முன்னிட்டு, மறுநாள் வெள்ளி கிழமை என்பதால் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்திருந்தது இதனை தொடர்ந்து சனி, ஞாயிற்றுகிழமை என்பதால், சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்திருந்தனர். ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள், தங்களது பணி நிமித்தமாக புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கும்பகோணம், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு சென்னை செல்வதற்காக குவிந்தனர். ஆனால், இரவு போதுமான பேருந்துகள் இல்லாததால், ஏராளமானோர் பேருந்துகள் கிடைக்காமல் தவித்தனர். இதனால் சென்னை செல்லும் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
சில பயணிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரவு நேரத்தில் கும்பகோணம் பேருந்து நிலையம் பரபரப்பானது. சென்னை செல்லும் பயணிகளின் நிலையறிந்த, தனியார் ஆம்னி பேருந்துகளில், கூடுதலாக பயணிகள் ஏற்றி கொண்டும், கூடுதலாக கட்டணம் வசூலித்து சென்னைக்கு அழைத்து சென்றனர். இதனால் அரசு போக்குவரத்து பேருந்துகளில் திடீரென பயணிகளின் கூட்டம் குறைந்தது.
மேலும், பேருந்து நிலையத்தின் அருகிலேயே, தனியார் வாகனங்கள், பயணிகளிடம், விரைவாக செல்வதாகவும், மழையாக இருப்பதால், பத்திரமாக அழைத்து செல்கின்றோம் என கூறியதையடுத்து, நள்ளிரவு நேரத்தில், சென்னை செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காவிட்டால், வேலை நிலை கேள்வி குறியாகும் என பயணிகள், தனியார் வாகனங்களில், சென்னைக்கு செல்வதற்காக ஏறி அமர்ந்தனர். இதனை அறிந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனிடம் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து, நள்ளிரவில், கும்பகோணத்தை அடுத்த அசூர் பைபாஸ் சாலையில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில், 30 மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியார் டூரிஸ்ட் வாகனங்களுக்கு மொத்தம் 80 ரூபாய் ஆயிரம் விதித்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கூறுகையில், வருடந்தோறும் சென்னை செல்லும் பயணிகளை ஆம்னி பேருந்துகள் கூடுதலாக பயணிகளையும், கட்டணங்களை வசூலித்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் புகாரளித்தையடுத்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மற்றும் டூரிஸ்ட் வாகனங்கள், கூடுதலாக பயணிகளை ஏற்றி கொண்டும், கட்டணங்களை கூடுதலாக வசூலித்து சென்ற தெரிய வந்ததையடுத்து, சுமார் 80 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இனி வரும் நாட்களில் கூடுதலாக பயணிகளையும், நிரணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலாக வசூலித்து சென்றால், வாகனங்களை பறிமுதல் செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.