திருடிய சிலையை விற்க முயன்ற 7 பேர் கைது - பழமையான மீனாட்சி அம்மன் மற்றும் ரிஷபதேவர் சிலை பறிமுதல்
மீட்கப்பட்ட 2 பழமையான சிலைகளை, கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில், பாதுகாப்பாக வைக்க உத்தரவு
சிலைத் திருட்டு கும்பலைச் சேர்ந்த 7 நபர்களைக் கைது செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அக்கும்பலிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள மீனாட்சியம்மன் உலோகச் சிலை உள்பட இரண்டு தொன்மையான சிலைகளை மீட்டு,கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சிலைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் தங்கள் வசம் உள்ள மிகத் பழமையான மீனாட்சியம்மன் உலோகச் சிலையை விற்க முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி உத்தரவுப்படி, டி.ஐ.ஜி. தினகரன் வழிகாட்டுதலின்படி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், பாலச்சந்தர் மற்றும் போலீசார் முரளி, பிரபாகரன், பாண்டியராஜன், முருகவேல் போலீஸார் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த கார்த்திக் (29), மூர்த்தி (33) ஆகிய சென்னையைச் சேர்ந்த இருவரை சிலையை வாங்குபவர்கள் போல மாறுவேடத்தில் அணுகினர்.
இதைத் தொடர்ந்து, நீண்ட நடைபெற்ற கடின பேரத்திற்குப் பின், 32 செ.மீ. உயரம் மற்றும் 3.5 கிலோ எடையுள்ள மிகத் பழமையான மீனாட்சியம்மன் சிலையை ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முன் வந்தனர் சிலைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவ்விருவர் மூலம், மேற்படி கும்பலைச் சேர்ந்த குமரன் (30) உள்ளிட்ட நபர்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அணுகி சிலையை கொண்டுவரச் செய்தனர். இதையடுத்து, அச்சிலையை விற்பதற்காக காலை 4 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் கொண்டுவந்த அக்கும்பலைச் சேர்ந்த கார்த்திக் (29), மூர்த்தி (33), சுந்தரமூர்த்தி (25), குமரன் (30), அசோக் (33), அறிவரசு (43) ஆகிய 6 நபர்களை மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்து அச்சிலையை மீட்டனர்.
விசாரணையின்போது அக்கும்பலைச் சேர்ந்த கார்த்திக் கொடுத்த தகவலின்பேரில், வேலூரிலுள்ள பொய்கை ஆற்றில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 செ.மீ. உயரம் மற்றும் 24.5 கிலோ எடையுள்ள மிகத் பழமையான ரிஷபதேவர் சிலையை போலீஸார் மீட்டு இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (24) என்பவரை கைது செய்தனர். இந்த இரண்டு சிலைகளும் என்ன உலோத்தால் ஆனவை, எக் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. எந்த கோயிலுக்கு சொந்தமான சிலைகள் என்பது தெரியவில்லை, தொல்லியல் துறை வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னரே சிலைகள் குறித்த முழுத்தகவல்கள் தெரிய வரும், . கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தால்தான் அதுபற்றி தெரிய வரும் என்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 7 பேரை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீட்கப்பட்ட சிலைகளை ஒப்படைத்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 7 பேரை, வரும் 29.10.2021 ந்தேதி வரை சிறையிலடைக்கவும், மீட்கப்பட்ட 2 பழமையான சிலைகளை, கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில், பாதுகாப்பாக வைக்க உத்திரவிட்டார். இதனையடுத்து, 7 பேரையம், கும்பகோணம் கிளை சிறையிலடைத்தனர்.