ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தலைமுறையினர் மயிலாடுதுறையில் சந்திப்பு - மொத்தம் இத்தனை பேரா..?
மயிலாடுதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறையினர் 485 பேர் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.
கூட்டுக் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 10 ஆண்டுகளாக எடுத்த முயற்சியில் ஐந்து தலைமுறைகள் மயிலாடுதுறையில் ஒரே இடத்தில் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சிமிகு சம்பவம் நடைபெற்றது. கொள்ளு தாத்தா முதல் எள்ளு பேரன் வரை கலந்து கொண்டு ஆடல், பாடலுடன் சந்திப்பு நிகழ்வு களைகட்டியது.
தற்போதைய நவீன காலகட்டத்தில் நகர்மயமாதலின் விளைவாக கூட்டுக்குடும்பங்கள் என்ற அழகிய அமைப்பு பெரும் அளவு குறைந்து வருகிறது. ஏழு தலைமுறைக்கு முன்னர் ஒரு குடும்பத்தில் பிறந்த பலர், கிளைகளாக மாறி பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்த பிறகு குடும்பங்களுக்கு ஒருவர் மட்டுமே வாரிசு என்று மாறிப் போன உலகத்தில், 5 தலைமுறையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மயிலாடுதுறையில் சந்தித்து கொண்ட நிகழ்வு கூட்டு குடும்பத்தின் பாரம்பரியத்தை எடுத்துகாட்டியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பையில் 1850ம் ஆண்டு முதல் தலைமுறையான விசுவலிங்கத்தின் மகன் ராமசாமி. கன்னியாகுடியை சேர்ந்த மீனாட்சி என்பவரை திருமணம் செய்து கீழப்பெரும்பள்ளம் கிராமத்திற்கு குடிபெயர்ந்து மளிகைகடை வைத்து மிராசுதாராக உயர்ந்தவர். 2-ம் தலைமுறையாக வாழ்ந்து மறைந்த ராமசாமி - மீனாட்சி தம்பதியினருக்கு 5 மகன்கள் 1 மகளுடன் துவங்கிய இவரது குடும்பம் தற்போது 7 வது தலைமுறையை கண்டுள்ளது.
2வது தலைமுறையில் இருந்து கூட்டு குடும்பமாக உள்ள இவர்களின் குடும்பத்தினர் நிலச்சுவான்தர்களாகவும், அரசுதுறை அதிகாரிகள் வெளிநாட்டில் வேலை செய்து தொழிலதிபர்களாக மாறியவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். கூட்டுக் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர்கள் அனைவரும் ஒன்று கூட நினைத்து சமூகவலைதளங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் உறவினர்களை சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்தனர்.
இந்நிலையில், இந்த ராமசாமி மீனாட்சி தலைமுறைகள் சங்கமம் நிகழ்வு மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாத்தாக்கள், பாட்டிகள், மகன்கள், பேரன்கள் கொள்ளுப்பேரன்கள், எள்ளுபேரன்கள் வரை 5 தலைமுறைகளை சேர்ந்த 27 குடும்பத்தினரை சேர்ந்த 485 பேர் ஒரே இடத்தில் சங்கமித்து தங்கள் உறவுகளுடன் கலந்துரையாடி அளவளாவினர். தற்போது வாழ்ந்து வரும் மூத்த தலைமுறைகளை மேடையில் ஏற்றி பேஃமிலி ட்ரீ புகைப்படத்தை வெளியிட்டனர்.
ஆடல், பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைவரையும் பரவசப்படுத்தியது. நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்துகொண்டும் கொஞ்சி பேசியும், மூத்த தலைமுறையினரிடம் ஆசி பெற்றும் அளவாளிய காட்சிகள் பரவசப்படுத்தியது. மேலும் தங்கள் தலைமுறை வாசிகள் வாழ்ந்த வீடு அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் பாக்கு வெட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டு கூட்டுக் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தலைமுறைகளின் சங்கமத்தினர் சந்தோஷமாக சேர்ந்து எடுத்து கொண்ட பிரமாண்ட புகைப்படம் மற்றும் ட்ரோன் காட்சிகள் பரந்து விரிந்து கூட்டு குடும்பமாக வாழ்வதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்