விடுமுறை நாட்கள், வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி இன்று முதல் 4 நாட்கள் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவுக்கும் செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்: விடுமுறை மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி இன்று முதல் 4 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாளை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி திருவிழா, ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை இயக்கப்படவுள்ளன.
இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்பவும் அவரவா் ஊா்களுக்கு செல்ல வரும் 3, 4ம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவுக்கும் செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த பேராலயத்தின் திருவிழா வருடாவருடம் ஆகஸ்ட் மாதத்தில் நடப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 29 -ம் தேதி கொடியேற்றதுடன் திருவிழா தொடங்கியது.
இந்த திருவிழா நாள்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கி.மீ. தூரம் நடைபயணமாகவும், பஸ், கார், வேன் என்று பல வாகனங்களிலும் வருகை தருவர். இந்தாண்டும் பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் திரண்டு வந்து ொண்டு இருக்கின்றனர். வரும் 7-ம் தேதிவரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், பேராலயத்தின் மேல்கோயில், பேராலயத்தின் கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் இரவு பகலாக வழிபாடுகள் நடைபெறும். இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். நடைபயணமாக வரும் பயணிகள் மற்றும் பஸ்களில் வரும் பயணிகள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.