இரண்டு ஆண்டுகளில் 142 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தரும் தகவல்
விடுமுறை தினங்கள், வார இறுதிநாட்களில் நீர்நிலைகளை தேடி மக்கள் படையெடுக்கின்றனர். நீச்சல் தெரிந்தவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் வந்தால் கொண்டாட்டம் தான்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவடத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நீர் நிலைகளில் குளிக்கும் போது தவறி விழுந்து 142 பேர் உயிரிழந்துள்ளனர் என தீயணைப்புப் துறை மாவட்ட அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.
கல்லணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள், குளங்கள், கிணறுகள் நிரம்பி நீர்நிலைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. தற்போது காலை 9 மணி வரை பனியும், அதன் பின்னர் வெயிலும் அடித்து வருகிறது.
இந்நிலையில் விடுமுறை தினங்கள், வார இறுதிநாட்களில் நீர்நிலைகளை தேடி மக்கள் படையெடுக்கின்றனர். நீச்சல் தெரிந்தவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் வந்தால் கொண்டாட்டம் தான். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் உற்சாகம் ஊற்றெடுத்து நீருக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஆழமான பகுதிக்கு சென்று ஆபத்தில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஆற்றில் அதிகம் தண்ணீர் வருகிறது. நீரின் வேகம் அதிகம் உள்ளது. யாரும் ஆற்றில் குளிப்பதோ, துணி துவைப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதோ செய்ய வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் இதை மீறுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறியதாவது: தீ விபத்துகள் எதிர்பாராமல் நிகழ்வது. ஆனால் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை எளிய முறையில் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம்.
நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் இறங்க வேண்டாம். இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் தீயணப்புத்துறை சார்பில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்று கொடுக்க வேண்டும். நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் இறங்கி பறிபோன உயிர்கள் ஏராளம்.
வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளம், கிணறுகள், கல்குவாரிகள் அமைத்த இடங்களில் உள்ள கல்குட்டைகள் மிகவும் ஆபத்தானவை. விளையாட செல்லும் சிறுவர்கள் அங்கு தேங்கி நிற்கும் நீரின் அழகை பார்த்த ஆனந்தத்தில் அதில் இறங்கி குளிக்கும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
எனவே, விடுமுறை நாட்களில் குழந்தைகள் எங்கே விளையாட செல்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தைகளிடம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சையில் கடந்த 2 ஆண்டுகளில் நீர் நிலைகளில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டதில் கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் , திருவிடைமருதூர் , ஒரத்தநாடு, பேராவூரணி திருவையாறு ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்தத்தில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நீர்நிலைகளில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம். தற்போது விடுமுறை தினங்கள் என்பதால் குழந்தைகளை பெற்றோர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் நினைத்தால் உயிரிழப்புகளை குறைக்க முடியாது. பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கியமாக வாலிபர்கள் அதிக ஆர்வத்தில் ஆற்றில் குதித்து குளிக்கின்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் நீச்சல் தெரியாமல் சிக்கி பலியாகின்றனர். நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தினரை நினைத்து பார்க்க வேண்டும். பெற்றோரை நினைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இனியும் ஆற்றில் விழுந்து பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.





















