Gouri Kishan: குதித்த மாதர் சங்கம்; நடிகை கௌரி கிஷனை அவமதித்த யூடியூபர்- கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
பெண்கள் மீதான அவமதிப்பை எந்த வடிவிலும் அனுமதிக்கக் கூடாது. கலைஞர்கள், ஊடகங்கள், மற்றும் சமூக தளங்களில் மரியாதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

திரைக்கலைஞர் கௌரி கிஷனை உருவ கேலி செய்து அவமதித்த “Vere Level Cinema” YouTuber கார்த்திக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நடிகை கெளரி கிஷன், சினிமா யூடியூபர் ஒருவரால் உருவக் கேலி செய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்/ பொதுச்செயலாளர் பிரமிளா, ராதிகா ஆகியோர் கூட்டாக மின்னஞ்சல் வழியாக மகளிர் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, திரைக்கலை கலைஞர் கௌரி கிஷன் அவர்களை Vere Level Cinema எனும் ஊடகத்தின் நிருபராக கலந்து கொண்ட கார்த்திக் தன்னுடைய கேள்வியில் உருவ கேலியும், கௌரி கிசனை அவமதிக்கும் வகையிலும், மரியாதையற்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
மன ரீதியான அடக்குமுறை
இந்தச் செயல் பெண்களின் கௌரவத்தையும், சுயமரியாதையையும் மீறிய கடுமையான பாலின பாகுபாட்டு செயலாகும். குறிப்பாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற பொது மேடையில் ஒரு பெண் கலைஞரை உருவ அடிப்படையில் கேலி செய்வது மன ரீதியான அடக்குமுறை ஆகும். இவ்வாறான விவாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடக்கிறபோது மற்ற பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருந்தது என்பது கண்டிக்கத்தக்கதாகும்.
பெண்கள் எந்தத் துறையிலும் மரியாதையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும். ஆனால் youtuber கார்த்திக்கின் இச்செயல், பெண்களை ஊடகம் மற்றும் பொது தளங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையே தடுக்கின்றன.
எந்த வடிவிலும் அனுமதிக்கக் கூடாது
பெண்கள் மீதான அவமதிப்பை எந்த வடிவிலும் அனுமதிக்கக் கூடாது. கலைஞர்கள், ஊடகங்கள், மற்றும் சமூக தளங்களில் மரியாதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மகளிர் ஆணையம் உடனடி தலையீடு செய்து youtuber கார்த்திக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.






















