(Source: ECI/ABP News/ABP Majha)
"வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" - காட்டமான கேள்வியுடன் அண்ணாமலை..
"வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முதலமைச்சரை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முதலமைச்சரை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பா.ஜ.க மாநில தலைவரை விமர்சித்து சில கருத்துக்களை பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் “நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் திமுகவிற்கு கைவந்த கலை.
“இந்தி தெரியாது போடா” என்று முதல்வரின் மகன் டி-ஷர்ட் கலாச்சாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைக்க... விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி... வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கிவைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், "வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரச்சனையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை.
பாஜக மொழித் திணிப்பு செய்வதாக, குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் அவசர குடுக்கை ஆர் எஸ் பாரதி அவர்களே, அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, திமுக செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் “தமிழை கட்டாயப் பாடம்” ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம். மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.
வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது அவசர குடுக்கை ஆர்.எஸ் பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். திமுகவின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு.
வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழகத்திற்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.
இப்படி, தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறை அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும்.
அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டிஜிபி அவர்கள், திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது? ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சிபிஐ விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரியவரும்.
நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.