TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..
நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது . நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் உரையாற்றி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக 21 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலுரை அளித்தார்கள்.
இந்த நிலையில், இந்த சட்டப் பேரவை கூட்ட தொடரில் பல்வேறு காரசார விவாதங்கள் நடைபெற்றதோடு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் வரும் 26 ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதேபோல், கோவையில் மாபெரும் நூலகம் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில் தான் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவுகளும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.