Sanatana Dharma: அமைச்சர் உதயநிதி பற்றவைத்த நெருப்பு... நாடெங்கும் பரவி வரும் சொல்... சனாதன தர்மம்- ஓர் அலசல்!
What is Sanatana Dharma in Tamil: சனாதன தர்மம் என்றால் என்ன என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கிறது. உண்மையில் சனாதன தர்மம் என்றால் என்ன?
கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா- இவற்றை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனமும்'' என்று பேசினார்.
அவரின் இந்தக் கருத்து இந்தியா முழுவதும் பேசுபோருளாகி உள்ளது. இந்து மதத்தினரும் பல்வேறு மாநில பாஜகவினரும், இந்து மதத்தை உதயநிதி ஸ்டாலின் அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அமைச்சர் உதயநிதிக்கு எதிராக டெல்லி மற்றும் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சனாதன தர்மம் என்றால் என்ன என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கிறது.
உண்மையில் சனாதன தர்மம் என்றால் என்ன?
என்சைக்ளோ பீடியாவைப் பொறுத்தவரை சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும். இதில் உள்ள சனாதன என்னும் சொல்லுக்கு நிலையான/ நித்தியமான என்று பொருள். தர்மம் என்றால் விதிமுறை/ கடமை/ நெறிமுறை என்று பொருள். ஒரு நபர் பின்பற்ற வேண்டிய சரியான, நிலையான விதிமுறைகளே சனாதன தர்மம் எனப்படுகிறது.
இந்து மதம், அடிப்படையில் சனாதன தர்மத்தின் நவீன தழுவலாகும், இது மனிதகுலம் அறிந்த பழமையான ஆன்மீக பாரம்பரியம் என்று கூறப்படுகிறது. இந்து மதம் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டாலும், ஆய்வாளர்கள் கி.மு. 3000 முதல் கி.மு. 1500 வரை இருக்கும் என்று கூறுகின்றனர்.
சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை, இயற்கையின் அனைத்து உருவாக்கங்களும் நிலையான கடமைகளைச் செய்வதைத் தங்களின் பொறுப்பாகக் கொண்டிருக்க வேண்டும். ஒழுக்க மற்றும் ஆன்மிகக் கொள்கைகளை முறையாகப் பின்பற்றுவதே சனாதன தர்மம் என்று கூறப்படுகிறது.
சனாதனம் ஓர் ஆரிய மதம்
பனாரஸில் உள்ள மத்திய இந்துக் கல்லூரி 105 ஆண்டுகளுக்கு முன்பு 1916 ஆம் ஆண்டு சனாதனம் குறித்து ஆய்வு நடத்தியது. தொடர்ந்து ’இந்து மதம், அதன் நெறிகள்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. இதன் அறிமுக உரையில் சனாதனம் என்பது வேதங்கள் மற்றும் புனித நூல்கள் மனிதர்களுக்கு அளித்துச் சென்ற பழங்கால விதிகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சனாதனம் ஓர் ஆரிய மதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்ண தர்மமே சனாதன தர்மம்
காஞ்சி காமகோடி மடத்தின் 68வது பீடாதிபதியும் அடியவர்களால் காஞ்சி மகா பெரியவா என்று அழைக்கப்படுவருமான சந்திரசேகர சரஸ்வதி, வர்ண தர்மமே சனாதன தர்மம் எனக் குறிப்பிடுகிறார். சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமே வர்ண தர்மம்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்ண தர்மம் என்பது, தொழிலின் அடிப்படையில் மனிதர்களைப் பல அடுக்குகளாகப் பிரிப்பதாகும். அதாவது, அந்தணர் என்னும் பிராமணர்கள், சத்திரியர் என்னும் அரச குலத்தினர், வைசியர் என்னும் வணிகர்கள் மற்றும் சூத்திரர் கூலித் தொழிலாளிகள் என்று நான்கு வகையில் மக்கள் பிரிக்கப்பட்டனர். இது மக்கள் மத்தியில் சமத்துவத்தை விடுத்து, மேல்நிலை மற்றும் கீழ்நிலை அடுக்குகளாகப் பிரிக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பிரிவினையை ஊக்குவிக்கவில்லை
ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஏபிபி நாடுவிடம் கூறும்போது, ''சனாதன தர்மம் என்பது பாரம்பரியம், சம்பிரதாயம், மதம் ஆகியவற்றுக்கு பெரியோர்கள் கொடுத்த பெயர். இந்த வார்த்தை புராணங்கள், இதிகாசங்கள், கிரந்தங்களிலேயே இருக்கிறது. எப்போதுமே உண்மையைப் பேச வேண்டும். உண்மையை அடுத்தவர் மனம் புண்படாமல் பேச வேண்டும் என்பதும் சனாதன தர்மம் கூறுவதுதான்'' என்கிறார்.
இந்து மதமும் சனாதன தர்மமும் சாதியப் படிநிலைகளை ஊக்குவிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''வர்ணாசிரம முறை இந்து மதத்தில் இருக்கிறது. இது வாழ்க்கைப் படிநிலைகளே தவிர, பிரிவினையை ஊக்குவிக்கவில்லை'' என்கிறார்.
உரக்கப் பேசிய திராவிட இயக்கங்கள்
எனினும் மானுடர்கள் அனைவரும் சமம். அவர்களைப் பிறப்பாலோ, குலத்தாலோ, தொழிலாலோ உயர்த்தியோ, தாழ்த்தியோ பார்க்கக்கூடாது என்று குரல்கள் எழுந்தன. இதை திராவிட இயக்கங்கள் அழுத்தமாக, உரக்கப் பேசின. அதன் நீட்சியாக அமைச்சர் உதயநிதியும் பேசினார். அதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று விளக்கம் அளித்த உதயநிதி, ’’சாமி கும்பிடக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அது அவரவர் விருப்பம். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை இனப் படுகொலை செய்யவேண்டும் என்று கூறவில்லை. நான் கூறியதை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். நான் அன்று பேசியதை விட இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன்.
மாறாதது என்று எதுவுமே இல்லை
பிரதமர் மோடி காங்கிரஸ் முக்த் பாரத் என்று சொல்லுகிறார். அப்படியென்றால் அவர் காங்கிரஸின் கொள்கையை எதிர்கிறார் என்றுதானே அர்த்தம். இதைவிட்டு இருக்கின்ற காங்கிரஸ்காரர்களை அழைத்து கொலையா செய்யப்போகிறார்..? அது இனப்படுகொலை என்றால், நான் பேசியதும் இனப்படுகொலைதான்.
மாறாதது என்று எதுவுமே இல்லை. அந்தக் காலத்தில் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்றார்கள். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும் என்று கூறினார்கள். அவை மாறவில்லையா? அதுபோல எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான்’’ என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.