October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
October 2 On This Day in History: நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்ததும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் அரும்பணியாற்றிய காமராஜர் காலமானதும் இதே நாளில் ஆகும்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர்களில் சிலர் என்றென்றும் இந்தியாவின் வரலாற்று பக்கத்தில் பொன்னெழுத்துக்களால் இன்றும் மின்னிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் மிக மிக முக்கியமான 2 பேர் இதே அக்டோபர் 2ம் தேதி பிறந்துள்ளனர். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்துள்ளனர். இதே நாளில் தமிழ்நாட்டை கட்டமைத்தவர்களில் முதன்மையானவரான காமராஜர் காலமாகியுள்ளார்.
மகாத்மா காந்தி:
இந்திய சுதந்திரத்தைப் பற்றி உலக அரங்கில் பேசும்போதும், இந்திய மக்கள் நினைத்து சிலாகிக்கும்போதும் நமது நினைவுக்கு முதன்முதலில் வருபவர் காந்தியே ஆவார். இந்திய சுதந்திரத்தை அகிம்மை முறையில் போராடி வென்று தந்த காரணத்தாலே அவரை மகாத்மா என்று மக்கள் கொண்டாடினர். வெள்ளையர்களுக்கு எதிராக தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என நூற்றுக்கணக்கான போராட்டத்தை நடத்தியவர். நாட்டு மக்கள் மத்தியில் விடுதலை தாகத்தை தூண்டி இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டவர் என்பதால் தேசப்பிதா என்று அழைக்கப்படுகிறார். பல இன்னல்களை கடந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்காக, லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை வழிநடத்திய காந்தி பிறந்ததே 1869ம் ஆண்டு இதே நாளில் ஆகும். இன்றும் காந்தியின் கொள்கைகளில் ஒன்றான சகிப்புத்தன்மை முதன்மையானதாக பலருக்கும் போதிக்கப்படுகிறது.
லால் பகதூர் சாஸ்திரி:
இந்திய சுதந்திரத்திலும் இந்திய வளர்ச்சியிலும் மிக மிக முக்கிய பங்காற்றியவர் லால் பகதூர் சாஸ்திரி. சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய பெருமை வல்லபாய் படேலுக்கு உண்டு. மேலும், நாட்டின் இரண்டாவது பிரதமர் என்ற பெருமையும் லால் பகதூர் சாஸ்திரிக்கு உண்டு. மகாத்மா காந்தியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தன்னை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என ஆங்கில அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்களில் பங்கேற்றவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அமைச்சராக இருந்தவர், நேருவின் மறைவிற்கு பிறகு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். 1964ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். லால் பகதூர் சாஸ்திரி பிறந்தது 1904ம் ஆண்டு இதே அக்டோபர் 2ம் தேதி ஆகும்.
காமராஜர்:
நாட்டின் சுதந்திரத்திலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்திய அரசியலிலும் அடித்தளமாகவும், பலருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்பவர் காமராஜர். நேர்மைக்காகவும், எளிமைக்காகவும் எப்போதும் புகழப்படுபவர் காமராஜர். 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்த இவர் காந்தி போன்ற தலைவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்ட வீரராக உருவெடுத்தார். தமிழ்நாட்டில் அமைந்த காங்கிரஸ் அரசுக்கு தலைமையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர். இவரது பதவிக்காலத்தில்தான் தமிழ்நாட்டில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டது, தொழில்துறை வளர்க்கப்பட்டது, தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை காமராஜர் கட்டினார். இதன் காரணமாகவே அவர் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று அழைக்கப்படுகிறார். 1954ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த அவர் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி தமிழ்நாட்டில் பலரது படிப்புக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அடுத்தடுத்து தமிழ்நாட்டில் அமைந்த திராவிட அரசுகளும் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான பள்ளி, கல்லூரிகளை கட்டினர். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் நேர்மையான அரசியல்வாதியாக உலா வந்த காமராஜர் மறைந்தது 1975ம் ஆண்டு இதே அக்டோபர் 2ம் தேதி ஆகும்.