நிரந்தரமாக மூடப்படும் வாங்கல் ரயில் நிலையம் - காரணம் என்ன..?
சேலம்-கரூர் ரயில், மோகனூருக்கு அடுத்து கரூரில் தான் நிற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூரில் பயணிகள் வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் நிரந்தரமாக மூடப்படுகிறது.
கரூர்-சேலம் ரயில்வழி தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே நிலையம் மூடப்படுகிறது. இனி அந்த ஸ்டேஷனில் ரயில்கள் ஏதும் நிற்காது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டபோது மோகனூருக்கும், கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து, பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நின்று, சென்று வந்தது. ஆனால், அப்பகுதி மக்களிடையே வாங்கல் ஸ்டேசன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை. சில நாட்கள் மட்டும் ஒருசில பயணிகள் ஸ்டேஷனுக்கு வந்து, ரயிலில் ஏறி சென்று வந்தனர். அதனால், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வந்தது.
இதன் அடிப்படையில் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை மூடுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் இனிமேல் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் சேலம்-கரூர் ரயில் நின்று செல்லாது. அதேபோல், பயணிகளுக்கான எந்த சேவையும் அங்கிருக்காது. சேலம்-கரூர் ரயில், மோகனூருக்கு அடுத்து கரூரில் தான் நிற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 2013ல் திறக்கப்பட்ட வாங்கல் ரயில் நிலையம் 11-வது ஆண்டில் நிரந்தரமாக மூடப்பட்டது.