VO Chidambaram Pillai: வ.உ.சி கப்பல் நிறுவனத்தை தொடங்கியது எப்படி: வந்தால் கப்பலோடு..! இல்லையெனில் உடல் கடலோடு
VO Chidambaram Pillai: மகன் நோய்வாய்ப்பட்டு இருக்க, மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, இந்த தருணத்திலும் கப்பல் வாங்காமல் உயிரோடு திரும்ப மாட்டேன் என நாட்டுக்காக புறப்பட்டார் வ.உ.சிதம்பரனார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பேச ஆரம்பித்தால், அதில் வ.உ.சிதம்பரனாரை பற்றி பேசாமல் இருக்க முடியாது. ஏனென்றால், அவர் தமிழ் மொழிக்கும், இந்தியா நாட்டிற்கும் ஆற்றிய தொண்டானது அப்படிப்பட்டது.
அதிகாரத்தில் ஆங்கிலேயர்கள்:
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்கு முதலில் வந்தது, வணிகம் செய்யத்தான். ஆனால், காலப்போக்கில், இந்தியாவில் உள்ள வளங்களை கண்டு வியந்த ஆங்கிலேயர்கள், வணிகத்தை விரிவுப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக இந்திய மன்னர்களின் நிர்வாகத்தில் புகுந்து ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிட்டனர்.
வணிக தாக்குதலில் வ.உ.சி
இந்தியாவின் வளங்களை சுரண்டி வரும் ஆங்கிலேயர்களை எப்படியாவது, துரத்த வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார் வ. உ.சி. அப்போது, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது, ஆங்கிலேயர்கள் நோக்கம் வணிகம்; அதை உடைத்தால் அவர்கள் வலுவிழந்து விடுவார்கள், வெளியேற்றிவிடலாம், என நினைத்தார்.
அதனால், வணிக ரீதியாக தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார். அப்போது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்துக்கான கட்டணமானது, மிக அதிகமாக இருந்தது. இதனால், இந்திய வணிகர்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சிக்கல்களை உணர்ந்த வ.உ.சி இந்தியாவுக்குச் சொந்தமான கப்பல்களை வாங்க முடிவு செய்தார்.
சுதேசி கப்பல் நிறுவனம்:
1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினர். வ.உ.சி உட்பட பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பங்குதாரர்கள் இணைந்து, வாடகைக்கு ஒரு கப்பலை வாங்கினர். இதனால், இந்தியர்கள், தங்களது பொருட்களை குறைந்த ஏற்றுமதி கட்டணத்தில் பொருட்களை ஏற்றுமதி செய்தனர். இதனால், இந்திய வணிகர்கள் லாபமடைந்தனர். இந்தியர்களும் கப்பல் போக்குவரத்தில் போட்டிக்கு வந்ததை ஆங்கிலேயர்களால் பொறுக்க முடியவில்லை. இதனால், கப்பல் வாடகை கொடுத்தவர்களை மிரட்டி, இந்தியர்களிடம் இருந்த கப்பலை திரும்ப பெற வைத்தது. இது, வ.உ. சி உள்ளிட்டோர்களை கோபத்தில் ஆழ்த்தியது. ‘
சுதேசி கப்பல்:
இதையடுத்து, இலங்கையில் இருந்து ஒரு கப்பலை குத்தகைக்கு வாங்கி வந்தார். ஆனாலும், வ.உ.சி ஒன்றை புரிந்து கொண்டார், நம்மிடம் சொந்தமாக கப்பல் இல்லாதவரை சிக்கல் துரத்திக் கொண்டே இருக்கும் என்று.
இதையடுத்து, ஒரு புதிய கப்பலை வாங்க வேண்டும் என தீர்மானித்தார். பம்பாய்-கொல்கத்தா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒரு புதிய கப்பலை வாங்கிவர புறப்பட தயாரானார்.
வந்தால் கப்பலோடு இல்லையென்றால்..!
ஆனால், அப்போது அவரின் குடும்ப சூழ்நிலையானது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தது. அவரது மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இருந்தார், அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இதனால், பலரும் அவரை தடை செய்தனர். ஆனால், அவர் அதை கேட்கவில்லை. எனது குடும்பத்தை கடவுள் பார்த்துக் கொள்வார்; எனது நாட்டை பார்த்துக் கொள்ள நான் போக வேண்டும் என சொல்லிவிட்டு கிளம்பினார். மேலும், திரும்பி வரும்போது கப்பலுடன்தான் வருவேன். இல்லையென்றால், அங்கேயே கடலில் விழுந்து உயிரை விடுவேன் என சொல்லிவிட்டு கிளம்பினார்.
களமிறங்கிய காலிபா:
பம்பாய் , கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று பலரிடம் பணம் திரட்டினார். மேலும், வணிகர்கள் பலரை பங்குதாரர்களாக இணைத்து, நிதி திரட்டி புதிய கப்பலை வாங்கினார். ஒரு மாதம் கழித்து கப்பலுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தார். அந்த கப்பலுக்கு, காலிபா என பெயரிடப்பட்டது.
இந்தியர்கள் , இந்திய கப்பலில் பயணிக்க ஆரம்பித்தனர். இதனால், ஆங்கிலேயர்கள் வணிகம் பாதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் கட்டணத்தின் விலையை பாதியாக குறைத்தார்கள் , இந்திய கப்பல் கட்டணமும் பாதியாக குறைக்கப்பட்டது. சில நேரங்களில், இலவசமாக அறிவித்து பார்த்தார்கள் ஆங்கிலேயர்கள்; ஆனாலும் , இந்திய மக்கள் சுதேசி கப்பலிலேயே பயணம் செய்தனர். இதனால் , ஆங்கிலேய கப்பல் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தனர்.
சுதேசி இயக்கம்:
இதையடுத்து, பல வழிகளில் தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தது ஆங்கிலேய கம்பெனி. இந்நிலையில், கோரல் மில் தொழிலாளர் போராட்டத்தின் போது இவர் கைதையடுத்து, கப்பல் நிறுவனமும் மூட்டப்பட்டது.
வ. உ. சி-யின் கப்பல் நிறுவன உருவாக்கமானது, ஆங்கிலேயர்களின் பொருட்களுக்கு எதிரான போராட்டத்தையும், ( சுதேசி ) இந்திய பொருட்களுக்கான ஆதரவையும் கொடுக்க வேண்டும் என ஊக்கத்தை ஏற்படுத்தியது.