4 ஆண்டுகளாக "ஈ" க்களுடன் போராடும் மக்கள்...! செவி சாய்க்காத அதிகாரிகள்..! தீர்வு கிடைக்குமா..?
விழுப்புரம் : திண்டிவனம் அருகே எரளிக்குப்பம் கிராமத்தில் கிராமப்பகுதியில் கட்டப்பட்ட கோழிப்பண்ணையால் காரணமாக தொடர்ந்து ஈ யின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே எரளிக்குப்பம் கிராமத்தில் கிராமப்பகுதியில் கட்டப்பட்ட கோழிப்பண்ணையின் காரணமாக தொடர்ந்து ஈ யின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எரளிக்குப்பம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் இந்த கிராம மக்களின் ஒட்டுமொத்த நிம்மதியையும், சுகாதாரத்தையும் கெடுத்துக்கொண்டுள்ளன "ஈ'க்கள். ஒரு விநாடி ஏமாந்தால் கூட காது, மூக்கு, வாய்க்குள் ஈக்கள் புகுந்து அட்டகாசம் செய்து விடுகின்றன.
வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் என்று ஒரு பகுதியையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமித்துள்ளன ஈக்கள். இதனால், தண்ணீர், டீ குடிக்க முடியாமலும், சாப்பாடு சாப்பிட முடியாமலும், நிம்மதியாக தூங்க முடியாமலும் அல்லாடுகின்றனர் எரளிக்குப்பம் கிராமம் மக்கள்.
நான்கு ஆண்டுகளாக இருக்கும் "ஈ' பிரச்னை கடந்த சில மாதங்களாக கிராமத்தில் இல்லாமல் இருந்தது. இதனால் நிம்மதியாக வாழ்ந்த மக்களை மீண்டும் "ஈ' தொல்லை மிரட்ட துவங்கியுள்ளது. எரளிக்குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை அமைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு கோழிப்பண்ணை அமைக்கப்பட்ட போது, கிராமத்தில் உள்ளவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சில மாதங்களாக அதிகளவில் கோழிப்பண்ணை கழிவுகளின் துர்நாற்றத்திற்கு "ஈ'க்கள் வரத்துவங்கியது. கோழிப்பண்ணையில் உற்பத்தியாகும் “ஈ”க்கள் எரளிக்குப்பம் கிராமம் முழுவதும் ஆட்கொண்டு விட்டது.
"ஈ'’ க்களால் பொறுமையிழந்த மக்கள், ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் கடந்து விட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அரசு துறை அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் இதற்கு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.